‘குடி’மகன்களின் கூடாரமான உத்திரமேரூர் ‘அம்மா பூங்கா’ - நடவடிக்கைக்கு கோரிக்கை

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்ட ”அம்மா பூங்கா”வும் அதற்குள் இருக்கும் உடற்பயிற்சி கூடமும் பராமரிப்பில்லாமல் உள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடத்துக்குள் இருந்த பல கருவிகள் மாயமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருப்புலிவனம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த உடற்பயிற்சி கூடம் கடந்த அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவையும், அதற்குள் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தையும், பொதுமக்களும் அப் பகுதி இளைஞர்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கூடத்தில் இருந்த பல உடற்பயிற்சி கருவிகள் தற்போது மாயமாகிவிட்டன.

மேலும், அம்மா பூங்காவும் முறையாக பராமரிக்கப்படாமல் தற்போது அது குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் பூங்காவை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே, அம்மா பூங்காவையும் அதற்குள் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தையும் உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரித்தை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE