கல்பாக்கம்: தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By கோ.கார்த்திக்

கல்பாக்கம்: சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர், சென்னை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் என்.பி.சி.ஐ.எல் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சென்னை அணுமின் நிலையம் மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் 1987ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது.

அதனால் மேற்கண்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் தலைவர் சின்ன கோவிந்தன் தலைமையில், சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில் சென்னை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கருப்பு பேட்ச் அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு 37 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தாமல் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான ஊழியர்கள் கண்டன முழக்கமிட்டனர். மேலும், கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர். இதில், ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சதுரங்கப்பட்டினம் ரவுண்டான பகுதியில் தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தினர் என்பிசிஐஎல் கீழ் சென்னை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE