மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

By காமதேனு

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டம் உலகின் மிகப்பெரிய மோசடி திட்டம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் 62வது நாள் முடிவில் தானேவில் நேற்று செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் தேர்தல் பத்திரம் நிதி குறித்து மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதன்மூலம் திரட்டப்பட்ட பணம் கட்சிகளைப் பிளவுபடுத்தவும், எதிர்க்கட்சி அரசாங்கங்களை கவிழ்க்கவும் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"இது உலகின் மிகப்பெரிய மோசடி திட்டம். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார். இப்போது கைவிடப்பட்ட திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளைப் பிளவுபடுத்தவும், எதிர்க்கட்சி அரசாங்கங்களை கவிழ்க்கவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழி இது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இருந்து பணத்தைத் திருடுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜகவுக்குப் பணம் கொடுக்க வற்புறுத்துவதும் ஒரு வழி. இந்தியாவின் பிரதமரால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் வழிதான் இந்த மோசடி தேர்தல் பத்திரங்கள். நான் குற்றச்சாட்டுகளைக் கூறவில்லை, ஆனால், உண்மைகளைக் கூறுகிறேன்.

ஒரு ஒப்பந்தம் வழங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு அல்லது சிபிஐ அல்லது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, நிறுவனங்கள் திடீரென்று பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களை வழங்கத் தொடங்குகின்றன. பாஜகவுக்கு ஒருபோதும் நன்கொடை அளிக்காத சில நிறுவனங்கள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மூலம் வழக்குப் பதிவு செய்தபின்னர் அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிக்கு நன்கொடை அளிக்கின்றன" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக மாறியுள்ளன. ஒரு நாள், பாஜக அரசு மாற்றப்படும்போது, ​​இதுபோன்ற செயல்களைச் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது விளைவுகளை ஏற்படுத்தும். உறுதியாக இருங்கள், இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும்," என்று அப்போது ராகுல்காந்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE