மதுரை: மதுரை மாநகரில் 60 முக்கிய சாலை சந்திப்புகளில் குடிநீர் விநியோக குழாய்களை பதிக்க போலீஸ் அனுமதி கிடைக்காததால் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்கு கொண்டு வந்த குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி தவிக்கிறது.
மதுரை மாநகராட்சி மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.1295.76 கோடியில் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து 125 எம்எல்டி நீர் எடுத்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக லோயர் கேம்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு அங்கு குடிநீரை தேக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள பண்ணைப்பட்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கே சுத்திகரிக்கப்படும் நீரானது மீண்டும் அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், லோயர் கேம்ப் முதல் மதுரை வரை குழாய் பதித்து, லோயர் கேம்ப் குடிநீர், மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் கடந்த 3 மாதத்திற்கு முன்பே வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இருப்பினும் இந்த தண்ணீரை 38 மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி, நேரடியாக பொதுமக்களுக்கு இன்னும் விநியோகம் செய்ய முடியவில்லை. மாநகராட்டியின் பெரும்பாலான வார்டுகளுக்கு பெரியாறு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளையும் மாநகராட்சி வழங்கவிட்டது. ஆனால், மாநகராட்சியின் முக்கிய சாலை சந்திப்புகளில் மாநகராட்சி, பெரியாறு குடிநீர் விநியோக குழாய்களை பதிக்க முடியவில்லை.
நகரின் முக்கிய 60 சாலை சந்திப்புகளில் ஏற்கெனவே, சாலைகள் குறுகலாக உள்ளன. ஒரு சில சந்திப்புகளில் பாலம் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடக்கிறது. இந்த சாலை சந்திப்புகளில் கடந்து குழாய்களை பதித்தால் மட்டுமே முல்லை பெரியாறு குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். ஆனால், இந்த 60 சாலை சந்திப்புகளில் குழாய்களை பதிக்க, மாநகர போக்குவரத்து காவல்துறையின் ஒப்புலை மாநகராட்சி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, முல்லை பெரியாறு தண்ணீரை குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு வந்த நிலையில் இந்த 60 முக்கிய சாலை சந்திப்புகளில் குடிநீர் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
» புயல் சின்னம் எச்சரிக்கை: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு
» திருவள்ளுவருக்கு காவி உடை: தமிழக ஆளுநருக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்
ஆனால், தேர்தல் காரணமாக இப்பணிகளில் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டது. ஆனாலும், மாநகராட்சி முயற்சி செய்தும், மாநகர போக்குவரத்து காவல்துறை, முக்கிய சந்திப்புகள் வழியாக குழாய்களை பதிக்க உடனடியாக அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பாலம் பணி உள்பட பல்வேறு பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அனுமதி வழங்கினால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் தற்போது வரை குழாய்களை பதிக்க அனுமதி வழங்காமல் மாநகர போக்குவரத்து காவல்துறை தாமதித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், அத்தியாவசிய பணியான குடிநீர் பணிகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கும்படி மாநகராட்சி தரப்பில் மாநகர போக்குவரத்து துறைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "முக்கிய சந்திப்புகளில் குழாய் பதிக்க, ஒரு நாள் இரவு அனுமதி கொடுத்தாலே போதுமானது. நாங்கள், குழாய் பதித்துவிடுவோம். ஒரே நேரத்தில் இதுபோல் மூன்று சந்திப்புகளில் அனுமதி கொடுத்தால் அந்த இடங்களை கடந்து குழாய்களை பதித்துக் கொண்டு சென்றுவிடுவோம். 60 இடங்களிலும் இதுபோல் குழாய்களை பதித்து மதுரைக்கு கொண்டு வந்த பெரியாறு கூட்டுக் குடிநீரை, பொது மக்களுக்கு விநியோகம் செய்ய தொடங்கிவிடுவோம்" என்றனர்.
இது குறித்து மாநகர காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "விஐபி-க்கள் வருகை மற்றும் அதிக போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை கருத்தில் கொண்டு, இரவில் குழாய்களை பதிக்க சுழற்சி முறையில் அனுமதி கொடுத்து வருகிறோம். மீதமுள்ள சாலை சந்திப்புகளிலும் அதுபோல் குழாய்கள் பதிக்க அனுமதி கொடுப்போம்" என்றார்.