தென்காசி: பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில் ஆகியவை தினசரி ரயில்களாகவும் சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - தாம்பரம் ரயில்கள் வாரம் மும்முறை ரயில்களாகவும் தற்போது இயங்கி வருகின்றன. கொச்சுவேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் இயங்கி வருகிறது. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமைகளில் தென்காசி ரயில் நிலையத்தில் சென்னைக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தட்கல், பிரிமியம் தட்கல் டிக்கெட்களும் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளுக்குமான டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்ட நெரிசலை காரணமாக வைத்து சென்னை செல்வதற்கு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருநெல்வேலியில் இருந்து தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சுரேஷ், "தென்காசி வழியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை செல்ல சிறப்பு ரயில்கள் இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருநெல்வேலியில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 3 நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்படும் திருநெல்வேலி - புருலியா ரயிலின் காலிப் பெட்டிகளை கொண்டு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» வண்டலூர் ஏரியின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: விவசாயிகள் நல சங்கம் தீர்மானம்
இதனால் திருநெல்வேலி - தென்காசி - விருதுநகர் மார்க்கத்தில் கூடுதல் ரயில் வசதி கிடைக்கும். ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளை தென்காசி தொகுதி எம்.பி. வலியுறுத்த வேண்டும்” என்று சுரேஷ் கூறினார்.