சேலம் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 17,014 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையை பொறுத்து காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 14,629 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 17,014 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரை காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 111.90 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 110.77 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 79.50 டிஎம்சி-யாக உள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம்தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக பதிவானது. 15-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.