கேஜ்ரிவால் ‘ராஜினாமா’ அரசியல் முதல் ‘குறி’ வைக்கப்படும் ட்ரம்ப் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை பதவி விலகல்: டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேட்பேன். நான் நேர்மையானவன் என கருதி மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன்" என்று கூறியிருந்தார்.

அடுத்த 5 மாதங்களில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல்வர் கேஜ்ரிவால் ராஜினாமா முடிவை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

“அரவிந்த் கேஜ்ரிவாலின் நேர்மை கேள்விக்குறியாகி மக்களை ஏமாற்ற அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது அரசியல் நாடகம். கடந்த காலத்தில் மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியா, அவரை கைப்பாவை போன்று இயக்கினார். இதே பாணியை கேஜ்ரிவாலும் பின்பற்றுகிறார்” என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“முதல்வர் கேஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்கப்பட்டதும், எங்கள் சட்டமன்றக் கட்சி கூட்டம் கூடி, புதிய தலைவரை தேர்வு செய்யும். அதன்பிறகு, சட்டமன்றக் கட்சித் தலைவர், குடியரசுத் தலைவரிடம் துணைநிலை ஆளுநர் மூலம் உரிமை கோருவார். அதன்பிறகு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். இந்த நடைமுறைகளுக்கு ஒரு வாரம் ஆகலாம்” என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சிறையில் விவேகானந்தன் தற்கொலை: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற இளைஞரும், 57 வயது விவேகானந்தனும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 5-ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருமே சிலமுறை காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்தார்.

முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. தொடர்ந்து அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு’ என திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டதும் விவாதப் பொருளானது. இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர்- திருமாவளவன் சந்திப்பு நிகழ்ந்தது.

திமுக - விசிக இடையில் எந்த விரிசலும் இல்லை: திருமாவளவன்: முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை” என்று கூறினார்.

முன்னதாக, “தேர்தல் கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பங்கு: பிரதர் மோடி புகழாரம்: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மூன்று பெரிய துறைமுகங்கள், பதினேழு சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கடல்சார் வணிகத்தின் முக்கிய மையமாக தமிழகம் மாறியுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், “உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இறுதி அழைப்பு: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் 36-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு 5-வது முறையாக மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இதுதான் இறுதி அழைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் மீட்கப்பட்ட 30 தமிழக யாத்திரிகர்கள்: உத்தராகண்ட் ஆதி கைலாஷின் நிலச்சரிவு பகுதியில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் 30 பேரும் மீட்கப்பட்டு பித்தோராகாரில் இருந்து வேனில் பத்திரமாக டெல்லிக்குப் புறப்பட்டனர்.

காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பத்தர் நக்சேனி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச்சிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை நிலைநாட்ட தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் முயல்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்..

தங்கம் விலை உயர்வு: சென்னையில் திங்கள்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையாகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களுக்கு நகை வாங்க திட்டமிட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்பட்டி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,880-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,040-க்கு விற்கப்படுகிறது.

ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர் கைது: அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஞாயிறுக்கிழமை மாலை ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இந்த முறை காயமேதுமின்றி ட்ரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ட்ர்ம்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், மீண்டும் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE