மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: வானரமுட்டியில் அமைக்கப்பட்டுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வானரமுட்டி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மதுபானக்கடை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வானரமுட்டியில் இருந்து தோணுகால் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களுடன் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், அதிமுகவைச் சேர்ந்த அலங்கார பாண்டியன் உள்ளிட்டோரும் வந்தனர்.

தகவலறிந்து நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான போலீஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், "இதுதொடர்பாக சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்தனர். ஆனால், “கடை அகற்றப்படும் என உத்தரவாதம் அளித்தால் நாங்கள் சமாதான கூட்டத்துக்கு வருகிறோம்” என மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து,"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் உறுதி அளிக்க முடியும்" என போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்திக்க வந்தனர். அங்கு அவர் இல்லாததால் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அலுவலகம் வந்த கோட்டாட்சியர் மகா லட்சுமியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE