‘நாசா அனுப்பின சந்திரயானைவிட நம்ம மாநாடு பெரிய சக்சஸ்!’ உதயகுமார் உற்சாகம்!

By சானா

மதுரையே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு(!) மணக்க மணக்க நடந்து முடிந்திருக்கும் மாநாட்டின் வெற்றியை, புதிதாகச் சமைத்த புளியோதரையை ருசித்தபடி கொண்டாடிக்கொண்டிருந்தனர் அதிமுக தலைவர்கள். ஊர்ப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை ஊதித்தள்ளும் வகையில் ஊடகங்களிடம் உற்சாகமாகப் பேசுவதில் வல்லவரான ஜெயக்குமாரும், விளைவுகளின் விஸ்தீரணம் புரியாமல் வெள்ளந்தியாகப் பேசுவதில் வித்தகரான ஆர்.பி.உதயகுமாரும் ஆவலுடன் அளவளாவிக்கொண்டிருந்தனர். பின்னணியில் விண்வெளி விஞ்ஞானி உடையில், செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்துக்கு அனுப்பும் வகையில் தெர்மாகோலை வைத்து ‘செங்கல்யான்’ விண்கலத்தின் மாதிரியைத் தயார் செய்துகொண்டிருந்தார் செல்லூர் ராஜூ.

அதையும்(!) பார்த்து வியந்தபடி, “நம்ம மாநாடு இப்படி சக்சஸ் ஆகும்னு நானே நம்பலைங்க. ‘அதிமுக அடுத்தடுத்து தேர்தல்ல தோத்தாலும் அந்தக் கட்சி நடத்துற மாநாடாச்சும் சக்சஸ் ஆகட்டும்’னு தமிழ்நாட்டு மக்கள் நம்மளை ஆசீர்வாதம் பண்ணிருக்காங்க போல. அதனாலதான் நாசா(!) அனுப்பின சந்திரயானைவிட நம்ம மாநாடு பெரிய சக்சஸ் ஆகியிருக்கு” என்று ஆனந்தப்பட்டார் ஆர்.பி.உதயகுமார். அதைக் கேட்டு துணுக்குற்ற தொண்டர் ஒருவர், “அண்ணே நாசா இல்லை. அது இஸ்ரோ” என்று சுட்டிக்காட்ட, “பரவாயில்லை. நாசாவும் நம்ம நாட்டோடதுதானே?! வல்லரசு நாடுகளே வணக்கம் சொல்ற அளவுக்கு இந்தியாவை வளர்த்துவிட்ட மோடி ஜி ஆட்சியில இப்படியெல்லாம் நடக்கலைன்னாதானே ஆச்சரியம். அதையும் அதிமுக மாநாடு மிஞ்சியிருக்குன்னா சும்மாவா?” என்றார் சமாளித்தார் உதயகுமார்.

“கரெக்ட்டு! கட்சியே இல்லாத ஓபிஎஸ் ஒருபக்கம்... கச்சத்தீவைத் தாரைவார்த்துட்டு நீட்டுக்கு எதிரா லேட்டா பொங்குற திமுக மறுபக்கம் எவ்வளவு நாடகம் போட்டாலும் நம்ம படம்தான் ஹிட்டு” என்று குதூகலித்தார் ஜெயக்குமார்.

“ஆமாமா. ‘ஜெயிலர்’ படத்தையெல்லாம்விட பெருசா ஜெயிச்சது நம்ம எழுச்சி மாநாடுதான்னு பிரஸ் மீட்ல பெருமையா பேசிருக்கேன். பார்த்தீங்களா?” என்றார் உதயகுமார்.

இதையெல்லாம் பசியோடு பார்த்துக்கொண்டிருந்த இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், “எல்லாம் சரிதான். ஆனா, ‘திரள்நிதி’ வசூலிச்சு கூட்டம் போடுற சின்ன கட்சிகள்கூட பிரியாணி, பிஸ்தா அல்வான்னு பிரமாதப்படுத்துறாங்க. நம்ம மாநாட்டுல ரேஷன் அரிசியில புளியோதரை போட்டுட்டதா எதிர்க்கட்சிக்காரங்கள்லாம் எகத்தாளம் பண்றாங்க” என்று குமுறினார்.

“கொட்டிக்கிடக்கிற புளியோதரையை செவ்வாய் கிரகத் தரையா வர்ணிச்சு சீண்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதெல்லாம்கூட பரவாயில்லை... ‘புரட்சித் தமிழரா? புளியோதரைத் தமிழரா?’ன்னு எடப்பாடி பழனிசாமி அண்ணனை ஏளனமாப் பேசுறாங்க” என்று படபடத்தார் இன்னொரு தொண்டர்.

உடனே குறுக்கிட்ட உதயகுமார், “அரை கோடி பேர் மாநாட்டுக்கு வர முடியாம ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டாங்க. 10 லட்சம் பேர் பசியாறுறதுக்குப் பதமா புளியோதரை பண்ணி ரெடியா இருந்துச்சு. 15 லட்சம் பேர் வந்துட்டாங்க. அப்புறம் எப்படி சாப்பாடு மிச்சமாகும்? ஏதோ பாத்திரம் பண்டத்தை எடுக்கும்போது நாலைஞ்சு பருக்கை சிந்தியிருச்சு. அது ஒரு பிரச்சினையா? உலகத்தையெல்லாம் தாண்டி ஏலியன்ஸெல்லாம் நம்ம மாநாட்டை உத்துப் பார்த்து ஆச்சரியப்படுறப்போ, உள்ளூர்ல சிலர் உளறிக்கொட்டுறதையெல்லாம் ஒரு விஷயமா பேசுறீங்களே?” என்றார்.

இதற்கிடையே, விண்வெளி மாதிரி ஆய்விலிருந்து வெளிவந்த செல்லூர் ராஜூ, “பூமியில மாநாடு போட்டாத்தானே போலீஸை வைச்சு தடுக்கிறாங்க… புளியோதரை ஃபெயிலர்னு பேசுறாங்க?! நாம அடுத்த தடவை புன்னகை மன்னன்... பூவிழிக் கண்ணன் அண்ணன் பழனிசாமி தலைமையில பறக்கும் தட்டுல போய், செவ்வாய் கிரகத்துல மாநாடு போட்டுடுவோம்” என்றார். தலைவர்கள் மெல்ல கலையத் தொடங்கினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE