திருமாவளவன் அழைக்காவிட்டாலும் விசிக மது ஒழிப்பு மாநாட்டை பாமக ஆதரிக்கும்: அன்புமணி அறிவிப்பு

By KU BUREAU

மதுரை / காரைக்குடி: பாமக தலைவர் அன்புமணி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாட்டில் மது ஒழிப்பை வலியுறுத்தி எந்தக் கட்சி கூட்டம், மாநாடு நடத்தினாலும், அதை பாமகஆதரிக்கும். அந்த அடிப்படையிலும், மது ஒழிப்பு பாமகவின்கொள்கையாக இருப்பதாலும், திருமாவளவன் எங்களை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் மதுஒழிப்பு மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பாமகவின் தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன, டாஸ்மாக் மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் மதுவை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால், அவர் முதலில் பாமகவுக்குத்தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.மது ஒழிப்பு குறித்து பேசும் திருமாவளவன், மது ஆலைகளை நடத்தும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது ஏன்?

அமைச்சரவையில் பங்கு தொடர்பாக திருமாவளவனின் பேச்சு சரியானது. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில்இருந்து அவர் நீக்கியதுதான் தவறு. அனைத்துக் கட்சிகளும் ஆட்சிக்குவர விரும்பும். எனவே, திருமாவளவனின் கருத்தில் தவறில்லை. திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க... அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது,‘‘திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவே மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார் திருமாவளவன். ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. இலங்கை கடற்படை அத்துமீறல்களைத் தடுக்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு மீது அனைத்து தரப்பினரும் கோபமாக உள்ளனர். ஆனால், பழனிசாமி திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறார்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE