திமுக, அதிமுக ஆட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கில்லை: செல்லூர் ராஜு

By KU BUREAU

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு,மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜகவினர் தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள், தமிழ் என்று பேசுவர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழர்களை அவமதிப்பர். கோவையில் ஓட்டல் உரிமையாளர் அவமானப்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை. மதவாத சக்தியான பாஜகவுடன் கூட்டணி கிடையாது.

தமிழகத்தில் அதிமுக, திமுக என ஏதாவது ஒரு திராவிட கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும். ஆனால், அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறப்பான ஆட்சிக்கு அது சரிப்பட்டு வராது. பல மாநிலங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன.

தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு மட்டும் அல்ல, அனைத்து போதைப் பொருள் ஒழிப்பு மாநாடும் நடத்த வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மது, போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள அளவுக்கு உயர்த்த வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது அவரது தனிப்பட்ட விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE