திமுகவை மிரட்டுகிறார் திருமாவளவன்: எல்.முருகன் கருத்து

By KU BUREAU

சிவகங்கை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காகவே திமுகவை மிரட்டுகிறார் விசிக தலைவர் திருமாவளவன் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சிவகங்கை அருகே மேப்பல், கொல்லங்குடி கிராமங்களில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக திமுகவை மிரட்டி வருகிறார் திருமாவளவன். விசிக ஒட்டுமொத்த பட்டியல் இனத்தவருக்கான கட்சிகிடையாது. பாஜக, பாமகவை பற்றிப்பேச திருமாவளவனுக்கு தகுதி கிடையாது.

சென்னையில் செயல்படும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டியஅவசியமில்லை. சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தால், அதுகுறித்து வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம். தமிழக அமைச்சரவையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பது குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை, இந்திய மீனவர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்துவதில், சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. யூடியூப் சேனல்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE