திருச்சி: மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதுபோல, தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி இருந்தால் தவறில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: சமூகப் பொறுப்புடன் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு,தேர்தல் அரசியலுடன் தொடர்புடையது அல்ல. டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான், கள்ளக்குறிச்சி, மரக்காணம் சாராய உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோரிக்கையாகும்.
மது ஒழிப்பு குறித்து பேசுவதற்குப் பதிலாக, தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று திசை திருப்புகிறார்கள். இவ்வாறு திரித்துப் பேசுவது வேதனை அளிக்கிறது. மதுவுக்கு எதிராக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கும்போது, மதுக் கடைகளை மூடுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அழுத்தம் கொடுத்தால், தேசிய அளவில் மது மற்றும் போதை ஒழிப்புக் கொள்கையை உருவாக்க முடியும்.
திமுக கூட்டணியில் விசிகதொடர்கிறது. தேர்தல் அரசியலில்ஈடுபடத் தொடங்கியதில் இருந்தேஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று வலியுறுத்தி வருகிறேன். மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் எனது இந்தக் கருத்தை வரவேற்றதை மேற்கோள்காட்டி, மறைமலை நகர் கூட்டத்தில் நான் பேசிய வீடியோதான் எனதுமுகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. வார்த்தைகளில் சில பிழைகள் இருந்ததால், அந்தப் பதிவுநீக்கப்பட்டது. பிழை சரி செய்யப்பட்டு, மீண்டும் அந்த வீடியோ பதிவிடப்பட்டது.
» நாட்டில் புதிதாக 200 விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்
» மகன் பாடம் நடத்தியதால் தலைமை ஆசிரியர் மீது ம.பி.யில் வழக்கு பதிவு
1975-ல் இருந்து மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோல இருப்பதில் தவறில்லை. இது யாரையும் எதிர்க்கவோ, மிரட்டுவதற்காகவோ எழுப்பக்கூடிய கருத்து அல்ல. ஜனநாயக ரீதியான கோரிக்கை. அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைப்பது ஜனநாயகம் அல்ல. அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். விசிக திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. கூட்டணி ஆட்சி குறித்தகோரிக்கையை திமுக கூட்டணியில் முன்வைப்பது குறித்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வருடன் இன்று சந்திப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசுகிறார்.