ஹோட்டலில் உணவளிக்க மறுப்பு: கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: போதையில் வந்த இளைஞர்களுக்கு ஹோட்டலில் உணவளிக்க மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மேலமணத்தட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29), கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வீரியபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (18) இருவரும் நண்பர்கள். இருவரும் இன்று (செப். 15) மது அருந்திவிட்டு அதீத போதையில் கோவை சாலையில் உள்ள ஒரு உயர்ரக தனியார் சொகுசு ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளனர். இவர்களின் நிலை அறிந்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களுக்கு உணவு வழங்க மறுத்து இருவரையும் வெளியேற்றி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் கரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த சிறப்பு எஸ்ஐ அவர்களை கட்டுப்படுத்த முயன்ற நிலையில், அந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் விக்னேஷ் ஒராண்டுக்கு முன் அந்த ஹோட்டலில் பணியாற்றியவர் எனக் கூறப்படுகிறது. குடிபோதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து இச்சம்பவம் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE