புதுச்சேரி பஞ்சாலைகள் பயன்பாடு குறித்து ஆளுநர் வழங்கிய ஆலோசனைக்கு ஏஐடியூசி எதிர்ப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜவுளி பூங்கா அமைக்காமல் ஏஎப்டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகளை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஆளுநர் கைலாஷ் நாதன் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகளை கைவிட ஏஐடியூசி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஏஐடியூசி மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள சுப்பையா இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஏஐடியூசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார். கௌரவ தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதுச்சேரி மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக ஆட்டோ ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஹோட்டல்களில் வேலை செய்து வருவார்கள், டைலரிங் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்யக் கூடியவர்கள் என 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நல சங்கத்தில் பதிந்துள்ளார்கள். இந்த நல சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக போராடிய விளைவாக அரசு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்து இதுவரை வாரியத்தை செயல்படுத்தவில்லை. எனவே, உடனடியாக நல வாரியத்தை செயல்படுத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கி நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த பஞ்சாலைகள் ஏஎப்டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகள் மூடப்பட்டது. இப்பஞ்சாலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஆளுநர் கைலாஷ் நாதன் பஞ்சாலையை பார்வையிட்டார். அதன்பிறகு, வேறு பயன்பாட்டுக்கு பஞ்சாலைகளை பயன்படுத்த ஆளுநரால் ஆலோசனை தரப்பட்டுள்ளது. இதை கை விட்டு மத்திய அரசை அணுகி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE