கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்தால் ஓசூரில் வெள்ளை சாமந்திப்பூ விற்பனை சரிவு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கேரள மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஓசூரில் வெள்ளை சாமந்திப்பூ விற்பனையும், விலையும் சரிந்தது.

ஓசூர், கெலமங்கலம், பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தை வாய்ப்பு: மேலும், சந்தை வாய்ப்பு, பூக்களின் விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், பருவத்துக்கு ஏற்ப மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள் ஓசூரில் உள்ள மலர் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களுக்கும் அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆண்டுதோறும், கேரள மாநிலத்தில் நடைபெறும் ஓணம் பண்டிகை விற்பனையை மையமாகக் கொண்டு, வெள்ளை சாமந்திப் பூவை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்வது உண்டு. இந்தாண்டு இதற்காக பசுமை குடில் அமைத்து முதல் தரமான வெள்ளை சாமந்திப் பூவை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

இயற்கை பேரிடர்: இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக ஓணம் கொண்டாட்டங்களை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் ஓசூர் மலர் சந்தையிலிருந்து கேரளா செல்லும் பூக்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தையின் தேவை குறைவால் வெள்ளை சாமந்திப்பூவின் விலையும் சரிவடைந்துள்ளது.

இது தொடர்பாக மலர் விவசாயிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மஞ்சள் சாமந்திப்பூவுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. வெள்ளை சாமந்திப்பூவுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. இதனால், கேரளாவில் 10 நாட்கள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டத்தின் போது, வெள்ளை சாமந்திப் பூக்களின் தேவை அதிகம் இருக்கும். இதனால், விலையும் அதிகரிக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை: ஓணம் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஓசூர் பகுதியில் பல விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளை சாமந்திப்பூவை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்தாண்டு ஓணம் பண்டிகையின்போது, மகசூல் பாதிப்பால் 300 டன் பூக்களை அனுப்பி வைத்தோம். அதேநேரம் எதிர்பார்த்த விலையை விடக் கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கிடைத்தது.

இந்தாண்டு சுமார் 500 ஏக்கரில் வெள்ளை சாமந்திப்பூ சாகுபடி செய்தோம். ஆனால், அண்மையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக ஓணம் கொண்டாட்டங்களை அம்மாநில அரசு ரத்து செய்தது. இதனால், ஓசூர் மற்றும் ராயக்கோட்டை மலர் சந்தையில் வெள்ளை சாமந்திப்பூ விற்பனை பாதிக்கப்பட்டது. மேலும், விலை கிலோ ரூ.45 முதல் ரூ.70 வரை மட்டும் விற்பனையானது. இதனால், பல விவசாயிகள் பூவை அறுவடை செய்யாமல் வயலில் அப்படியே விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE