“சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்” - திருப்பூர் சு.துரைசாமி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: சென்னை நுங்கம்பாக்கம் அண்ணாவின் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என திராவிட இயக்க மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று (செப். 15) பேரறிஞர் அண்ணாவின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் வீட்டை அரசு நினைவு இல்லமாக்க வேண்டும் என, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற தில் இருந்து, ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளுக்கு முன்பாக முதல்வருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வலியுறுத்தி வருகிறார்.

இந்த முறை அமெரிக்காவுக்கு செல்லும் முன்பாகவும், முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக சு.துரைசாமி கூறியதாவது: 1969ம் ஆண்டு பிப். 3-ம் தேதி அண்ணா மறைந்த பிறகு, அவரது பூத உடல் கொண்டுவந்து முதலில் வைக்கப்பட்ட இடம் அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் இல்லம் தான். இன்றைய தலைமுறைக்கு இது தெரியவாய்ப்பில்லை. அதன்பின்னர் தான் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கோடிக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வந்து செல்லும் வெளி மாவட்ட மக்களும், வெளிநாட்டவரும் மற்றும் மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வகையில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு வந்து பார்த்துச் செல்லக்கூடிய காரியத்தை ஆட்சியாளர்கள் செய்யாமல் இருப்பது மன வேதனை ஏற்படுத்துகிறது. இந்திய நாட்டில் பல தலைவர்கள் அவர்கள் சிறிது காலம் தங்கிய வீடுகள் எல்லாம் அரசுடமை ஆக்கப்பட்டு, நினைவு இல்லங்களாக தற்போது பாதுகாத்து வருவதை பார்க்கிறோம்.

ஒரு முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியா கவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவராகவும், கோடான கோடி தமிழ்நாட்டு மக்களால் அண்ணா இன்றளவும் நினைவில் வைத்து போற்றப் படுகிறார். இன்றைக்கு திமுகவில் உள்ள பல தலைவர்கள், அண்ணாவின் மறைவுக்கு பிறகு கட்சிக்கு வந்தவர்கள்.

எனவே, திராவிடமாடல் அரசு அண்ணா கடைசியாக சுமார் 15 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த, அவரது நுங்கம்பாக்கம் வீட்டை அரசுடமையாக்கி, நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும். இதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE