“விவகாரத்தை முடித்து கொள்ள விரும்புகிறோம்” - அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம்

By KU BUREAU

கோவை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய நிதி அமைச்சருடன் நடந்த உரையாடலின்போது, எங்கள் நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் கெளரவத் தலைவருமான டி.சீனிவாசன் ஜிஎஸ்டி விகிதங்கள் பற்றி பேசினார்.

மறுநாள் நிதியமைச்சருடன் சந்திப்பு தொடர்பான வீடியோ வெளியானதால் தவறான புரிதல் ஏற்பட்டது. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதியமைச்சரை சந்தித்தார். இந்த தனிப்பட்ட வீடியோ ஊடகங்களில் கவனக்குறைவாக பகிரப்பட்டது. இது நிறைய தவறான புரிதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்புகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஜிஎஸ்டி கூட்டத்தை ஏற்பாடு செய்த நிதியமைச்சர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் எழுந்த தேவையற்ற அனுமானங்கள், தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இவ்விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE