அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய தேமுதிக, ஒருவழியாக அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணி எந்தவித சிக்கலும் இல்லாமல் பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. ஆனால், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் அணியில் கட்சிகளை இடம்பெற செய்வதில் இன்னும் முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
அதிலும் அதிமுகவின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியபிறகு பலமான கூட்டணியைக் கட்டமைத்து விட முயன்ற அக்கட்சிக்கு அந்த முயற்சியில் தோல்வியே கிட்டியுள்ளது. பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்து பலமான கூட்டணியாக மாற்றி விடலாம் என்று அதிமுக நினைத்திருந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளையும் பாஜக பல்வேறு விதமாக ஆசை காட்டி தங்கள் பக்கம் ஈர்த்ததாகக் கூறப்பட்டது.
இதனால் அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு பாஜகவுடன் மறைமுக பேச்சு வார்த்தையில் பாமக மற்றும் தேமுதிக ஆகியவை ஈடுபட்டன. அதில் பாமகவுடன் கூட்டணியை பாஜக இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ள பாஜக, அதே நேரத்தில் தேமுதிக வைத்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு திரும்பிவிடும் எண்ணத்தில் தேமுதிக உள்ளது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என தேமுதிக கூறியதால் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக தலைமையிடம் சில கோரிக்கைகள் முன் வைத்துள்ளதாக தெரிகிறது.
ஒரு மாநிலங்களவை எம்பி சீட், 5 மக்களவைத் தொகுதிகள் வேண்டும். குறிப்பாக கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பிரேமலதா கோரியுள்ளார். அவற்றில் மக்களவைத் தொகுதிகளில் இடங்களை குறைத்துக்கொண்டு மற்றவற்றை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. அதனால்தான் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
அதன்படி, தேமுதிக நிர்வாகிகள் இன்று அல்லது நாளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.