மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு | வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

By காமதேனு

மாசியும் பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடப்படுவது காரடையான் நோன்பு. தன் கணவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக, சுமங்கலி பெண்கள் வேண்டிக்கொள்கிற வரம் இது!

அசுவபதி மகள் ராஜகுமாரியான சாவித்திரி ஒருநாள் தன் தோழிகளுடன் உலாவச் சென்றாள். அங்கே வனத்தில் அழகிய நீர்வீழ்ச்சியைக் கண்டு பரவசமானாள். அப்போது அழகிய முகம் தண்ணீரில் தென்பட்டது. அங்கே... அழகே உருவெனக் கொண்ட இளைஞன் நின்றிருந்தான். பார்த்ததும் அவனிடம் தன் மனதைப் பறிகொடுத்த சாவித்திரி, ’இவனே என் கணவன்’ என மனதில் வரித்துக் கொண்டாள்.

அரண்மனைக்குத் திரும்பினாள். தன் மனதில் பட்டதை, தந்தையாரிடம் சொன்னாள். ‘இதுவே என் விருப்பம், ஆசை’ என்று உறுதிபடக் கூறினாள். அப்போது, மன்னரைக் காண நாரதர் வந்தார். நாரதரிடம் மகள் சொன்னவற்றையெல்லாம் எடுத்துரைத்தார் மன்னர்.

‘’அவன் பெயர் சத்தியவான்’’ என்றார் நாரதர். ‘’ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் அவன் மரணமடையப் போகிறான். இது அவனுடைய விதி’’ என்று தெரிவித்தார் நாரதர். இதைக் கேட்டு மன்னர் பதறிப்போனார். ஆனால் மகளோ தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தாள்.

‘சத்தியவானே என் கணவர்’ என்பதில் தெளிவாக இருந்தார். வேறுவழியின்றி, சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது.

மாளிகையையும் பணிப்பெண்களையும் விடுத்து, சத்தியவானுடன் வனவாசம் வந்தாள் சாவித்திரி. அங்கே பர்ணசாலை அமைத்து இனிதே வாழ்ந்தார்கள். இதனிடையே ஒருவருடத்தில் கணவர் இறந்து போவான் என நாரதர் சொன்னதால், கணவரைக் காக்க என்ன வழியென்று தெரியாமல் அல்லாடினாள். கடவுளே கதியென பார்வதிதேவியை வேண்டினாள். அப்போது அசரீரி கேட்டது. ஸ்ரீபார்வதிதேவி செய்த விரதமொன்றைச் செய்யச் சொல்லி அறிவுரையாக வந்த அசரீரியின்படி விரதம் மேற்கொண்டாள்.

அந்த வனத்தில் கிடைத்த நெல்லில் இருந்து அரிசியை எடுத்தாள். பொடிப்பொடியாக்கினாள். அதில் காராமணியைச் சேர்த்தாள். அடைபோல் தட்டினாள். வெண்ணெயும் சேர்த்து அதையே நைவேத்தியமாக உமையவளுக்குப் படைத்தாள். மஞ்சள் சரடு எடுத்து வேண்டிக்கொண்டாள். ‘’எப்போதும் சுமங்கலியாக இருக்கவேண்டும்’’ என்று தேவியிடம் வேண்டிக்கொண்டு கழுத்தில் கட்டிக்கொண்டாள்.

கரவாசெளத் விழாவில் வடமாநில பெண்கள்


ஒருவருடம் ஓடிவிட்டிருந்தது. சத்தியவானுக்கு ஆயுள் பலம் குறைந்து, ஆயுளே போகும் தருணமும் வந்தது. வீட்டுக்கு அருகில் சத்தியவான் விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அங்கே யமதேவன், பாம்பு வடிவில் வந்தான். பாம்பு அவனைக் கொத்தியது. விஷம் கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கேறியது. மயங்கிச் சரிந்த கணவனை ஓடிவந்து தாங்கிப்பிடித்தாள் சாவித்திரி!

சாவித்திரி எனும் கற்புக்கரசியின் அழுகை, வீரியம் கொண்டதாக இருந்தது. ஒருகணம், அந்த வனத்தையே உலுக்கியது. அவளின் கற்புநெறியால், யமதருமன் அவள் முன்னே வந்து நின்றான். ‘’என் கணவர் உயிரைக் கொடு’’ என்று வாதாடினாள். கதறினாள். அழுதாள். ஆவேசமானாள். யமனே கிடுகிடுத்துப் போனான். ‘’நான் என் கடமையைத்தான் செய்தேன். அவனுடைய உயிரைத் தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’’ என்றான் யமன்.

இதைக் கேட்ட சாவித்திரி, ‘’எமராஜனே, உன்னை வணங்குகிறேன். என் வம்சம் வாழையடிவாழையென தழைத்தோங்க வேண்டும்’’ என நமஸ்கரித்தாள். ‘’ததாஸ்து’’ என்று ஆசீர்வதித்தான் எமன். ‘ததாஸ்து’ என்றால் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தம். வரத்தைப் பெற்றுக் கொண்ட சாவித்திரி, அந்த வனமே நடுங்கும்படி சிரித்தாள். அந்தச் சிரிப்பில், வெற்றிக்களிப்பு தெரிந்தது. யமனுக்கு ஏதும் புரியவில்லை.

சாவித்திரி எமதருமனிடம், ‘’வம்சம் தழைக்க வரம் கேட்டேன். நீங்களும் அருளினீர்கள். அப்படியெனில், என் கணவர் சத்தியவான் இல்லாமல், என் குலம் எப்படி தழைக்கும்?’’ என்று கேட்டாள்.

சாவித்திரியின் விரதமும் அவளின் கற்புத்தன்மையும் ஒருசேர அவள் எமனுடன் சாதுர்யமாக வாதிட்டு வென்றாள். எமதருமன் வேறுவழியின்றி, சத்தியவானை உயிர்பெறச் செய்தான். சாவித்திரியிடம் கணவரைக் கொடுத்தான். அவளை வணங்கினான். அங்கிருந்து மறைந்தான். பிறகு, சாவித்திரி தன் கணவன் சத்தியவானுடன் நீண்ட நெடுங்காலம் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தாலி பலத்துடனும் வாழ்ந்தாள் என்கிறது புராணம்.

இதைத்தான் ‘காரடையான் நோன்பு’ என்று கொண்டாடுகிறோம். நம் பெண்கள், கணவரின் ஆயுளுக்காகக் கொண்டாடுகிற உன்னதமான பண்டிகை இது. உயிர்ப்பான விரதம் இது. ‘மாசிக்கயிறு பாசிப்படியும்’ என்று சொலவடையே உண்டு. அதனால்தான், இந்தத் தருணத்தில், புதுச்சரடு எடுத்து தாலி மாற்றிக்கொள்கிற வழக்கமும் இருக்கிறது.

வடக்கில், ‘கரவாசெளத்’ என்று இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், விரத முறை அங்கே வேறு. காலையில் தொடங்கி, தண்ணீர் கூட குடிக்காமல், சாப்பிடாமல் மாலைக்குப் பிறகு சந்திரனை தரிசித்த பிறகுதான் விரதத்தை முடிக்கிறார்கள்.

அம்பாளுக்கு, கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியமாகப் படைப்பது வழக்கமாயிற்று. நோன்புச் சரடில் மலரைக் கட்டி பூஜையில் வைத்துவிட்டு, வேண்டிக்கொண்ட பிறகு கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது மாங்கல்ய பலம் தந்தருளக் கூடியது.

‘உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் நூற்றேன்’ என்று சொல்லி வேண்டுவார்கள் பெண்கள். உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும்’ என்று சொல்லிப் பிரார்த்திப்பார்கள்.

சாவித்திரியின் சரிதத்தில் காதல் உண்டு. கணவன் மீதான அன்பு உண்டு. கடவுள் மீதான பக்தி உண்டு. அந்தப் பக்தியின் மூலம் வரமும் பெற்றாள். ஒரு இல்லற வாழ்வின் மேன்மையை, மிக யதார்த்தமாக உணர்த்துகிற பண்டிகையாகவும் விரதமாகவும் ‘காரடையான் நோன்பு’ பண்டிகையை பெண்கள் அனைவரும் கொண்டாடுகிற தாத்பர்யம் இதுதான்!

மங்கலே மங்கலதாரே மாங்கல்யே

மங்கலப் பிரதே மக்களார்த்தம்

மங்கலேஸி மாங்கல்யம் தேஹி மே ஸதா!

என்கிற ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து ‘காரடையான் நோன்பு’ இருப்பது ரொம்பவே சிறப்பு. இந்நாளில் என்றில்லாமல், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் கூட இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம். பெண்கள் ஆண்களுக்காகவும் ஆண்கள் பெண்களுக்காகவும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால், நீண்ட நெடுங்காலம் ஆயுளும் ஆரோக்கியமாக இனிதே வாழலாம்.

காலையில் தலைக்குக் குளித்து பூஜையறையில் அமர்ந்து, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மெல்லிய நோன்புக் கயிற்றில் ஒரு சில பூக்களைக்கட்டித் தயார் செய்துகொள்ளவேண்டும். இல்லத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொன்று வீதமும், இல்லத்தில் உள்ள அம்பாள் மற்றும் தாயார் படங்களுக்கு ஒவ்வொன்று என்றும் தயார் செய்துகொள்ளலாம்.

பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கவேண்டும். கோலமிட்ட இடத்தில், நுனி வாழை இலை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்கள் வைத்து, அதன் நடுவே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். இலைக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இலையைச் சுற்றிலும் நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொண்டு, கணவரையும் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் உள்ள பெரியவர்களை, வயது முதிர்ந்த சுமங்கலிகளை நமஸ்கரித்து ஆசி பெறுவது வழக்கம்.

மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பை, கர்மசிரத்தையுடன் அனுஷ்டிப்பதன் மூமல் நீண்ட ஆயுளுடன் இணைபிரியாத தம்பதியாக வாழலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE