மீனவருக்கு மொட்டை அடித்த இலங்கை அரசு: தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களைக் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 3 மீனவர்களுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களும் கடந்த 7-ம் தேதி பணத்தை செலுத்தினர்.

ஆனால், கடந்த 6-ம் தேதி அபராத தொகை செலுத்தவில்லை என்று கூறி சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிப்பறைகளை சுத்தம் செய்யவைத்தும், கழிவுநீர்க் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

பின்னர் விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களும் நேற்று சொந்த ஊரான தங்கச்சிமடம் வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட, அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதையடுத்து, இலங்கை அரசின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலைக் கண்டித்து, ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறும்போது, “தமிழக மீனவர்களை மொட்டை அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE