குரூப் 2 தேர்வில் ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையான வினா - விடை

By KU BUREAU

சென்னை: குரூப்-2 முதல்நிலைத் தேர்வு வினாத்தாளில் பொது அறிவு பகுதியில் ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய வினா- விடை பகுதி இடம்பெற்றிருந்தது. ‘கூற்று-காரணம்’ வடிவிலான அந்த கேள்வியில் கூற்று பகுதியில், ‘இந்திய கூட்டாட்சியில் மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என இரு வகையான பணிகளை செய்கிறார்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது.

காரணம் பகுதியில், ‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என இருந்தது. இந்த கேள்விக்கு A, B, C, D, E என 5 பதில்கள் தரப்பட்டிருந்தன. இவற்றில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

தமிழக ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளுநர் பதவி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து12,661 பேர் தேர்வு எழுத வரவில்லை.கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம்2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் நேற்று நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93,966 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5 லட்சத்து 81,305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். மீதமுள்ள 2 லட்சத்து 12,661 பேர்தேர்வு எழுதவில்லை. சென்னையில் 251 மையங்களில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் எழுதினர்.

எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேவையான ஆதாரங்களுடன் ஆன்லைனில் முறையிடலாம். விடைத்தாள் மதிப்பீட்டு பணி 2 அல்லது 3 மாதங்கள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுக்க கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும்.

வருடாந்திர தேர்வு கால அட்டவணைப்படி, இந்த ஆண்டில் இன்னும் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்த ஆண்டு இதுவரை வெவ்வேறு துறைகளுக்கு 10,215 பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும்10 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குரூப்-4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதி மற்றும் பொது தமிழ் பகுதியில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர். அண்மை நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள் பெரிதாக இடம்பெறவில்லை என்றும் பொது ஆங்கிலம் பகுதிவினாக்கள் எளிதாக இருந்ததாகவும் கூறினர்.

மெயின் தேர்வுக்கு ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், தற்போது 2,327 காலியிடங்களுக்கு ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் மெயின் தேர்வெழுத தகுதிபெறுவர். ஒருவேளை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மெயின் தேர்வெழுதுவோரின் எண்ணிக்கையும் உயரும். முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருப்பதாக தேர்வர்கள் மத்தியில்கருத்து நிலவுவதால் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE