‘தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணி டிசம்பரில் நிறைவு’

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என விமான நிலைய ஆணைக்குழு தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

இந்திய விமான நிலைய ஆணையக் குழு தலைவர் எம்.சுரேஷ் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ரூ.381 கோடியில் நடந்து வருகிறது. இதில், 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடையும். மேலும், தகவல் தொடர்பு தொடர்பான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, அரபு தேசம் ஆகிய இடங்களுக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேர விமானங்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, பயணிகள் விமானத்துடன் சரக்கு விமான போக்குவரத்தும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. இங்கு 320 பயணிகள் செல்வதற்கு ஏற்றாற்போல் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் ஏ-321 என்ற பெரிய ரக விமானங்கள் இயக்கப்படலாம். விமானநிலைய மேம்படுவதற்கான பணப்பற்றாக்குறை எதுவும் இல்லை. விமான பயணிகளின் தேவைக்கற்ப விமான நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

தஞ்சாவூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, தமிழக அரசு அதற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டவுடன் இந்திய விமான ஆணையம் இணைந்து பரந்தூர் விமான நிலையத்தை நிலையத்தை அமைக்கும் பணியை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE