தாம்பரம்: தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்தும் முயற்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக களம் இறங்கியுள்ளது. இதற்காக, ‘மரக்கன்றுகளை நட்டு கொடுப்பதற்கு நாங்க ரெடி அதை பராமரிக்க நீங்கா ரெடியா?’ என்ற வாசகத்துடன் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறது அந்தக் கட்சி.
அவர்களின் அந்த துண்டுப் பிரசுரத்தில், 96000 80764 என்ற வாட்ஸ் அப் எண்ணை குறிப்பிட்டு, மரக்கன்றுகளை பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணில் தங்களது பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை அனுப்புமாறு குறிப்பிட்டுள்ளனர். இதற்கு விருப்பம் தெரிவிக்கும் முதல் 100 நபர்களுக்கு ‘ஹாட் பாக்ஸ்’ பரிசாக வழங்கப்படும் என்றும், இலவசமாக நட்டுத் தரப்படும் மரக்கன்றுகளை சிறந்த முறையில் பராமரிக்கும், 10 நபர்களுக்கு, ஆண்டு இறுதியில் தங்கக் காசு பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தாம்பரம் தொகுதியை பசுமையாக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், “வாட்ஸ் அப் எண்ணில் விருப்பம் தெரிவிப்பவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மரக்கன்று நட வேண்டிய இடத்தை பார்வையிடுவோம். பின்னர் அந்த இடத்தில் இலவசமாக 6 அடி உயரம் கொண்ட மரக்கன்றை நட்டு, ‘ட்ரீ கார்டு’ம் வைப்போம். அதன்பின் அவர்கள் தண்ணீர் ஊற்றி முறையாக அதை பராமரிக்க வேண்டும்.
ஆண்டு இறுதியில், அந்த மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரிக்கும், 10 பேருக்கு தங்கக் காசு பரிசாக வழங்குவோம். இது, மக்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை மேலும் தூண்டும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
» குரூப்-2 தேர்வு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,299 பேர் ஆப்சென்ட்!
» ‘சினிமா புகழ்’ புதுச்சேரி பழைய துறைமுக பாலத்தை முழுமையாக இடிக்க முடிவு
இதனிடையே, ‘திமுகவினர் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்ற இருக்கின்றனர். அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட்டால் பயனுள்ளதாக இருக்கும்’ என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் திமுகவினர், ‘முதலில் அதிமுகவினர் அவர்கள் வீடுகளில் மரக்கன்று நட்டு முறையாக பராமரிக்கட்டும். பின்னர் பொதுமக்களிடம் வரட்டும்’ என பஞ்ச் வைத்து வருகின்றனர்.