ஈஷாவில் ஆதியோகி சிலை அமைக்க அனுமதி பெறவில்லை!நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!

By காமதேனு

கோவை ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தொடர்ந்திருந்த வழக்கில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி, அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

2017ல் தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கங்கா புர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆதியோகி சிலை

வழிபாட்டு தலத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, ஈஷா பவுண்டேசனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேசன் நிர்வாகி பெறவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் சம்மந்தப்பட்ட கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரிய வந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE