புதுச்சேரி கடற்கரைச் சாலையில் காந்தி சிலை அமைந்துள்ள இடத்தில்தான் பிரெஞ்சு ஆட்சியில் துறைமுகம் இருந்தது. கடந்த 1866-ல்அதை ஒட்டிய பகுதியில் 192 மீட்டர் நீளத்துக்கு அமைந்த கடல் பாலம் திறக்கப்பட்டது. அதன்பின், 1952-ல் வீசிய புயலில் கடல் பாலம் இடிந்தது. கடல் பாலத்தின் சாட்சிகளாக தற்போதும் நீட்டிக் கொண்டிருக்கும் சிறுசிறு கம்பிகளை அங்கு காணலாம்.
வம்பாகீரப்பாளையத்தில் தற்போது இருந்த கடல் பாலம் 1962-ல் கட்டி திறக்கப்பட்டது. இதற்கிடையே துறைமுக பாலம் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்தது. அதனால் பழைய துறைமுகப் பாலம் மக்கள் பார்வைக்கு மட்டும் இருந்தது. இந்தப் பாலத்தில் அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடக்கும்.
குறிப்பாக ஹாலிவுட் படமான ‘லைப் ஆஃப் பை’, சூர்யாவின் ‘மவுனம் பேசியதே’, சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘எதிர்நீச்சல்’, விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’ இப்படியாக தொடங்கி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இங்கு படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
இந்த படப்பிடிப்புகளைத் தொடர்ந்து, துறைமுகப் பாலத்தில் பல லட்சத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. பாரம்பரியமிக்க பழைய துறைமுகப் பாலத்தின் மேற்பரப்பு 'பளபளப்பாக இருந்தாலும் அடிப்பகுதி சேதம் அடைந்திருந்தது. இதனால் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
» விஜயின் ‘தளபதி 69’ படம் அடுத்த வருடம் அக்டோபரில் ரிலீஸ்: வெளியானது அறிவிப்பு!
» இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் குழப்பம்: கும்பகோணத்தில் பரபரப்பு!
இந்தச் சூழலில் கடந்த 2022 மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இப்பகுதியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ‘இதற்கான முழு நிதியும் மத்திய அரசே தரும்’ என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகியும் பாலம் கட்டப்படவில்லை.
இடிந்த நிலையில் உள்ள பாலமும் அப்படியேதான் உள்ளது. ‘எப்போது புதிய பாலம் வரும்?’ என அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள கடல் பாலத்தை முழுவதுமாக இடிக்க இருக்கிறோம். புதிதாக 150 மீட்டருக்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. அதை மேலும் 15 மீட்டர் என கடலுக்குள் நீட்டித்து, பயணிகளுக்கான சிறு கப்பல் வந்து செல்லும் வகையில் (ferry) அமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன" என்று தெரிவித்தார்.