அந்நிய களைச்செடிகளை அகற்றி புற்கள் வளர்ப்பு - கோவையில் வனத்துறை புதிய முயற்சி

By ஆர்.ஆதித்தன்

கோவை: மைனஸ் டிகிரி வெப்பநிலைக் கொண்ட ஆர்டிக் பணிப்படி தேசம் முதல் சுட்டெரிக்கும் பாலைவனங்கள் வரை அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் புல்வெளிகள் உள்ளன. இந்த புல்வெளிகள் பூமியின் நிலப்பரப்பில் சுமார் 25 சதவீதத்தை உள்ளடக்கியவை. மண் அரிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீர் மட்டத்தை செறிவூட்டுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த புல்வெளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

இயற்கை புல்வெளிகள் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி வரையாடுகளின் பிரதான உணவாக உள்ளன. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் புல்வெளிகளின் பரப்பு குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புல்வெளி பரப்பளவு குறைவது அதில் வாழும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது.

காடுகளில் ஆக்கிரமித்திருக்கும் களைச்செடிகளால் புல்வெளிகள் அழிவுப் பாதையை நோக்கி செல்கின்றன. வனப்பகுதியில் யானை உட்பட பெரிய வன உயிரினங்களுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து வாழை, கரும்பு ஆகியவற்றை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் மனித-வன உயிரின மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மனித வன உயிரின மோதலை தடுப்பதில் அரசு பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் உண்ணி செடி, சீமை கருவேல மரம், பார்த்தீனியம் உள்ளிட்ட அந்நிய களைச்செடிகளை அகற்றும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் நாட்டு வகை புல்வெளிகளை அமைக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக, கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மாதிரி புல்வெளி நிலத்தை வனத்துறை அமைத்து வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் மாதிரி புல்வெளி நிலம் அமைக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வன பொருட்கள் மற்றும் வன உயிரினங்கள் துறை தலைவர் கே.பரணிதரன் கூறியதாவது: மனித - வன உயிரின மோதலை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய களைச்செடிகளை அகற்றி புல்வெளி அமைக்கப்பட உள்ளது. இதற்காக வேகமாக வளரும் நாட்டு புல் வகைகளை அடையாளம் கண்டு பல்வேறு முறைகளில் வளர்க்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

களைச்செடிகளை அகற்றும் அதே இடத்தில் பல்வேறு வகை புற்கள் வேகமாக வளரக் கூடும். மீண்டும் அந்த இடத்தில் களைச்செடிகள் வளர்ந்துவிடாமல், அதிவேகமாக வளரும் நாட்டு வகை புற்களை விதைகள் மூலமாகவும், தண்டுகள், கட்டுதல் முறையிலும் உருவாக்க உள்ளோம்.

ஒவ்வொரு புல்லும், ஒவ்வொரு வகையில் உருவாக்கம் செய்யப்படும். இதற்கான மாதிரி புல்வெளி நிலம் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கூர்க்கான் புல், கருகாலைப் புல், சர்க்கரைப்புல், அருகம்புல் ஆகிய நான்கு வகை நாட்டு புற்களை மாதிரி புல்வெளி நிலத்தில் வளர்க்க உள்ளோம். இந்த வகை புற்களை யானை, காட்டுமாடு, மான்கள் விரும்பி சாப்பிடும். இவை வன உயிரினங்களுக்கு நல்ல ஊட்டச்சத்து தரக்கூடிய புற்கள் ஆகும்.

புல்வெளி வளர்ப்பு குறித்து களப்பணியா ளர்கள் உட்பட வனத்துறையினருக்கு பயிற்சி வழங்க உள்ளோம். அவர்கள் மூலம் பிற பகுதிகளில் புல்வெளி வளர்ப்பு விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் புல்வெளி மறுசீரமைப்புத் திட்டம் ‘மெய்புலம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE