விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரிப்பது தொடர்பான ஆய்வை நடத்த, யுனெஸ்கோ குழுவினர் வரும் 27-ம் தேதி அக்கோட்டையை பார்வையிட வருகைதருகின்றனர்.
யுனெஸ்கோ குழுவினர் வருகை தருவதையொட்டி, செஞ்சிக் கோட்டையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து,செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனி தலைமை யில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர், “யுனெஸ்கோ குழுவினர் வருகை தர உள்ள சூழலில், தற்போது செஞ்சிக் கோட்டையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை 20-ம் தேதிக்குள் முடித்திட வேண்டும். குழு ஆய்வு செய்யும் நாளன்று கோட்டையில் தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
கோட்டையைச் சுற்றியுள்ள தனியார் இடங்களில் தற்போதுள்ள முட் புதர்கள், முட்செடிகளை இந்த தருணத்தில் தொல்லியல் துறை மற்றும் பேரூராட்சிகள் மூலம் அகற்றிட வேண்டும். மேலும், தொல்லியல் துறை, வனத்துறை மற்றும் தனியார் வசம் உள்ள இடங்களை நில அளவை செய்து தனியார் இடம் மற்றும் கோட்டைக்குச் சொந்தமான இடங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்திட வேண்டும்.
கோட்டைக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோட்டை வழித்தடங்களை குறிக்கும் தகவல் பலகைகளை புதிதாக மாற்ற வேண்டும். பேரூராட்சிகள் மூலம், கோட்டையைத் தூய்மைப்படுத்தி குப்பைகளை அகற்றிட வேண்டும்.
» ‘இதுதான் எனது கடைசி முயற்சி’ - போராடும் மருத்துவர்களை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி!
» குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை தூய்மை பணியாளர் மகன்!
செஞ்சிக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்த குறும்படம் ஒன்றை தயார் செய்து, யுனெஸ்கோ குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். யுனெஸ்கோ குழு வருவதையொட்டி, 18-ம் தேதி முதல் 21-ம்தேதி வரை மாணவ, மாணவிகள், தன்னார்வலர்களைக் கொண்டு மரபு நடை விழா நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில், செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய யுனெஸ்கோ குழுவினர் வருகைபுரியும் சமயத்தில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இக்குழுவினர் வரும்போது, ராஜா தேசிங்கு வம்சாவழியினர் பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் - ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், செஞ்சி ஊராட்சிஒன்றிய குழுத் தலைவர் விஜய குமார், செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.