விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

By காமதேனு

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் பாஜகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக, பாஜகவுடன் தனது கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக தனி அணியாக தேர்தலை சந்திக்க உள்ளது. அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியன், இளங்கோ யாதவ், சரத்குமார் ஆகியோர் இணைந்துள்ளனர். பாமக மற்றும் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவுக்கே தங்கள் ஆதரவு என்பதை அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று அமமுகவை நடத்திக் கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ்சும் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுகவை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக தொடர்ந்து முயற்சித்து வந்ததால் இந்த இருவருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தை இத்தனை நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்தது.

டி.டி.வி.தினகரன்

கூட்டணிக்கு வர அதிமுக உறுதியுடன் மறுத்துவிட்ட நிலையில் தற்போது கடந்த இரண்டு தினங்களாக இந்த இரண்டு பேரிடமும் பாஜக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. நேற்று நள்ளிரவு பதினோரு மணிக்கு தொடங்கிய இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைகள் இன்று அதிகாலை மூன்று மணிவரை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இரண்டு தரப்பிலும் தொகுதிகள் குறித்த பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.பாஜக தரப்பில் தங்களுக்கு எந்தவித நிபந்தனையும் வைக்கப்படவில்லை என்று பேச்சு வார்த்தைக்கு பின்னர் தெரிவித்த டி.டி.வி.தினகரனுக்கு, தென் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நான்கு தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு தென் மாவட்டங்களில் உள்ள இரண்டு தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE