தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோயில் யானை நல்லடக்கம்

By KU BUREAU

காரைக்குடி: குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோயிலில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது. உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள சண்முக நாதப் பெருமான் கோயிலுக்கு கடந்த 1971-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் யானை ‘சுப்புலட்சுமி’ வழங்கப்பட்டது. இந்த யானை கோயில் அருகேயுள்ள தகரக் கூடாரத்தில் தங்க வைக்கப் பட்டிருந்தது. வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது.

இந்நிலையில் செப்.11-ம் தேதி இரவு கூடாரத்தில் மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென ஓலையில் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் யானை சுப்புலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. இதனால் உள்ளூர் மக்கள், பக்தர்கள் சோக மடைந்தனர்.

குன்றக்குடியில் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்பட்ட யானை உடல்.

ஆதீன மடத்தில் வைக்கப் பட்டிருந்த யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், செந்தில்நாதன் எம்எல்ஏ மற்றும் உள்ளூர் மக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி குன்றக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து யானை உடலை அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கண்ணீருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் மதுரை-காரைக்குடி சாலை அருகே உடற்கூறு ஆய்வுக்கு பின் யானை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பழநியில் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த குமரேசனுக்குச் சொந்தமான யானை `சரஸ்வதி'. இந்த யானை தனியார் நிகழ்ச்சி களில் பங்கேற்பது வழக்கம். 68 வயதை நெருங்கிய நிலையில், இந்த யானை கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்ததால், உடற்கூறாய்வுக்குப் பின் சண்முகா நதி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE