பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைத்ததை அடுத்து, அக்கட்சியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது கனி வெளியேறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, தொடர்ந்து பல தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிட்ட சமக படுதோல்வியை சந்தித்தது. அதனால் இந்த தேர்தலில் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்தார் சரத்குமார். அதனால் அதிமுகவுடன் கூட்டணி சேர முதலில் முயற்சித்தார். அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் சமகவுக்கு தொகுதி ஒதுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாஜகவை நோக்கி சமத்துவ மக்கள் கட்சி நகர்ந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலாயத்திற்கு சென்ற சரத்குமார், பாஜக தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார். அப்போதே பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம்பிடிப்பது உறுதியானது. மேலும் சரத்குமார் அல்லது அவரது மனைவி ராதிகா ஏதேனும் ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற பேச்சும் எழுந்தது.
ஆனால், இன்று எதிர்பாராதவிதமாக சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார். இளைஞர்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் கட்சியை பாஜகவுடன் இணைத்ததாக சரத்குமார் தெரிவித்தார். இது பல்லாண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக - சமத்துவ மக்கள் கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் கூட, எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரமுகர் கத்தி கூச்சலிட்டபடியே வெளியேறினார். இது கட்சியின் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் மத்தியிலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த முகமது கனி, அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் உடனடியாக இணைந்துள்ளார். பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்ததால், அவர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து முகமது கனி கூறுகையில்,"சரத்குமாரின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராகி, அடுத்து அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கிய பிறகு கட்சியில் இணைந்தேன். ரசிகர் மன்றம், அரசியல் கட்சி என சுமார் 30 வருடம் அவருடன் இருந்துள்ளேன். மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைத்ததை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். என்னோட மனநிலைதான் அனைத்து தொண்டர்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். மன விரக்தியோடுதான் இன்று கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து விட்டேன்.
தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு வாருங்கள் என்றே தலைமையில் இருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு வந்தது. இதை கேட்டு சமத்துவ கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது, அங்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இருந்தனர். கூட்டணியை உறுதி செய்வதற்காக வந்துள்ளார்கள் என்றே நினைத்தோம். ஆனால், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரிடமும் கலந்தோசிக்காமல், கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்துள்ளார். சரத்குமார் தலைமையில் தான் நாங்கள் செயல்படுவோம். பாஜக தலைமையின் கீழ் எங்களால் செயல்பட முடியாது. அதனால்தான் கட்சியில் இருந்து விலகுவது என்று முடிவெடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!
ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!
சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!
1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!
ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!