சென்னை: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என தான் பேசிய காணொலியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த 12-ம் தேதி விசிக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இதில் திருமாவளவன் பேசியதாவது: "எந்தப் பகுதியில் போதைப் பொருள் கிடைக்கிறது. இதெல்லாம் தன்னியல்பாக நடக்கிறதா? இதன் பின்னால் திட்டமிட்ட சதி இருக்கிறது. நீயெல்லாம் படிக்க வேண்டும் என ஆசைப்படாதே, உயர் பதவிக்கு வர வேண்டுமென ஆசைப்படாதே என்று சொல்பவர்கள், எப்படி வீரியமிழக்கச் செய்வது என சிந்திக்கின்றனர்.
வளரும்போதே போதைப் பொருட்களுக்கு பழக்கப்படுத்துகின்றனர். இது ஒரு செயல்திட்டம். எதிர்த்துப் பேசக்கூடாது, போராடக் கூடாது, கல்வியில் தேர்ந்துவிடக் கூடாது, உயர்ந்த பதவிக்கு வர ஆசைபடக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்கின்றனர். தமிழகத்தில் இதற்கு முன்னர் கூட்டணி ஆட்சிக்கான குரலை உயர்த்தினார்களோ இல்லையோ, 2016-ல் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தியது விசிக.
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றோம். அதிகாரத்தில் பங்கு வேறு, கூட்டணியில் பங்கு என்பது வேறு. தமாகா நிறுவனர் மறைந்த மூப்பனாருக்கு என்னிடம் பிடித்தது அதுதான். அவரிடம் கூட்டணி தொடர்பாக பேசும்போது, “ஏதோ முழக்கம் சொன்னீர்களே என்ன?” என என்னிடம் கேட்டார்.
» அரியலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2ஏ தேர்வுகளை 6,734 பேர் எழுதி வருகின்றனர்!
» சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின்: செய்தியாளர் சந்திப்பு முழு விபரம்!
எனக்கு நினைவில்லை. அப்போது அங்கிருந்த அழகிரி உள்ளிட்டோர் சொன்னது "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு". இது 1999-ல் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தவுடன் விசிக முன்வைத்த முழக்கம். நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும்போது சொன்ன முழக்கம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்.
அதிகாரத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஜனநாயகத்தை கொடுக்க வேண்டும். அதிகாரத்தை சமூக வாரியாக மக்களுக்கு அளிக்க வேண்டும். இதையெல்லாம் சொல்லும் துணிச்சல் பெற்ற இயக்கம் விசிக. எங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த வரலாறையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
இந்த காணொலியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று காலை 8.45 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவன் பகிர்ந்திருந்தார். பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கினார். இதையடுத்து, 11 மணியளவில் மீண்டும் அதே காணொலியை பகிர்ந்து ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கு ஜனநாயகம், எளிய மக்களுக்கு அதிகாரம் என திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். சிறிது நேரத்தில் இந்தப் பதிவையும் திருமாவளவன் நீக்கியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய சிறிது நேரத்தில் திருமாவளவன் இதுபோன்ற காணொலியை பகிர்ந்து நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, விசிக-வின் மாநாட்டுக்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.