'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'?... திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!

By காமதேனு

அனைவருக்கும் மக்கள் தான் எஜமானர்கள், அவர்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை தமிழக அமைச்சர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், "அரசியல் சாசனத்தைக் காப்பதும் மாநிலத்தில் சட்டத்தை மீறிய நிகழ்வுகளைத் தட்டிக் கேட்பதும் ஆளுநர்களின் கடமை. சனாதனத்தை ஒழிப்பதற்கு உதயநிதிக்கு முன்பாக எத்தனையோ மகத்தான முகலாய மன்னர்கள் எல்லாம் முயன்றிருக்கிறார்கள். கூர்வாள் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள்.

அதில் எல்லாம் ஒழியாத சனாதனத்தை உதயநிதியால் ஒழிக்க முடியாது. நிச்சயமாக இதை ஒரு கேலிக்கூத்தாகத்தான் நான் பார்க்கிறேன், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற காரணத்தினாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை. ஆளுநர் பதவி தேவையற்றது என திமுகவினர் அடிக்கடி சொல்கிறார்கள்.

10 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக எத்தனை முறை ஆளுநர் பதவியை ஒழிக்க முயன்றது? இந்த அமைச்சர்களைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

இவர்கள் எல்லாம் எப்படி அமைச்சர் பதவிக்கு தகுதியானார்கள் என எண்ணத் தோன்றுகிறது. ஆளுநருக்கு கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை என்கிறார்கள். அப்போ நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை? அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை திமுக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE