சென்னை இருளில் மூழ்கியதால் மக்கள் அவதி; அலமாதி தீ விபத்தால் 5 மணி நேரம் மின்தடை: மின்வாரியம் விளக்கம்

By KU BUREAU

சென்னை: சென்னையை அடுத்த அலமாதி துணை மின்நிலையத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாகவே சென்னையில் நேற்று முன்தினம் இரவுமின்சாரம் தடைபட்டது. அனைத்துபகுதிகளுக்கும் அதிகாலை2.30 மணிக்குள் மின்விநியோகம் சரிசெய்யப் பட்டுவிட்டது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, நுங்கம்பாக்கம், மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மாநகர் முழுவதும் இருளில் மூழ்கியது. சாலைகளில் மின்விளக்குகள் எரியவில்லை. ரயில் நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

6 மணி நேரத்துக்கு பிறகு: அரைமணி நேரத்துக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். ஆனால், 5 - 6 மணி நேரத்துக்கு பிறகே, சென்னையில் மின்சார விநியோகம் சீரானது. இரவு முழுவதும் மின்விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடை குறித்து மின்வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய மின்சார மையமாக விளங்குவது மணலி துணை மின் நிலையம் (400/230 கிலோவோல்ட்). நகரின் முக்கிய பகுதிகளுக்கு இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மணலி துணை மின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் 2 மின்னூட்டி ஆதாரங்கள் இயக்கத்தில் இருந்தபோதும், 400/230 கி.வோ. அலமாதி துணை மின்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மணலி துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் வழங்கும் அலமாதி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம்-2 மின்னூட்டி ஆதாரங்களில் மின்தடைக்கு வழிவகுத்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும், இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

100 சதவீதம் சீரான மின்சாரம்: மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மின்வாரியம் துரிதமாக மேற்கொண்டது. இதையடுத்து, சென்னையில் மின்தடை ஏற்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாலை 2.30 மணிக்குள் மின்விநியோகம் சரிசெய்யப்பட்டு, தற்போது 100 சதவீதம் வரையில் தங்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE