சென்னை: நாடு முழுவதும் சமீப காலமாக ரயில் நிலையங்கள், கல்விநிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது. இதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது.
அதுவும் ஒரே கும்பல்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பலை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே,இதுபோன்ற மிரட்டல் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.