சென்னை விமான நிலைய ஓடுபாதையை சுத்தப்படுத்தும் 2 அதிநவீன இயந்திரங்கள்

By சி.கண்ணன்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை உள்ளிட்ட இடங்களை சுத்தப்படுத்துவதற்காக அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 2 இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதி, ஓடுபாதை, டாக்ஸிவே போன்றவற்றை சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணியை, இதுவரை விமான நிலைய லோடர்கள் என்ற தனியார் ஒப்பந்த ஊழியர்கள் செய்து வந்தனர். அதில், பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. சில நேரங்களில் சரியாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளாததால், ஓடுபாதையில் உள்ள தூசிகள் விமானத்தின் உள் பகுதிக்குள் சென்று தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படும் நிலை இருந்தது.

முக்கிய பிரமுகர்கள் வரும் நேரங்களில் விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு ஏழு அடுக்கு என்று பாதுகாப்புகள் பலப்படுத்தப்படுவதால், தனியார் நிறுவன தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் விமான நிலையத்துக்குள் வருவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.அந்த நேரங்களில் ஓடுபாதை உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

கடுமையான மழைக் காலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இந்திய விமான நிலைய ஆணையம், வெளி நாட்டு தொழில் நுட்பங்களை போல் அதிநவீன இயந்திரங்களை இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் அதற்காக, இரண்டு அதி நவீன புதிய இயந்திரங்கள், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய அதிகாரிகள், ”ரன்வே மெக்கானிக்கல் ஸ்வீப்பர் எனப்படும், இந்த இயந்திரங்கள், சென்னை விமான நிலையத்தில் பணியை தொடங்கியுள்ளன. இந்த இயந்திரங்கள் ரன்வே, டாக்ஸி வே, ஏஃப்ரான் பகுதிகளை மிகத் துல்லியமாக, சுத்தப்படுத்துவதோடு, அதி வேகமாகவும் செயல்படுகிறது.

இயந்திரத்தின் அடிப்பாகத்தில், காந்தத் தகடுகளுடன் கூடிய, இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், ரன்வே போன்ற பகுதிகளில் சிதறிக் கிடக்கும் இரும்புத் துகல்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்துகிறது. அதிக அழுத்தத்துடன் கூடிய, ஹை பிரஷர் தண்ணீர் குழாய்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

அதனால் தரைகளைக் கூட தண்ணீர் அடித்து, கழுவி சுத்தப்படுத்துகிறது. அதற்கான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பிரஷ்களும் இந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் தரைப் பகுதி, மத்திய பகுதி, பக்கவாட்டுப் பகுதி ஆகியவற்றையும் சுத்தம் செய்கின்றன. இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமானது. விபத்துகள் போன்ற அபாயகரமான சம்பவங்களும் இதில் நடக்காது.

இந்த அதி நவீன இயந்திரங்கள் இரண்டும், தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து, மூன்று ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில், சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. செயல்பாட்டை பொறுத்து, ஒப்பந்த காலம் மேலும் நீடிக்கப்படும். மற்ற விமான நிலையங்களிலும் இந்த அதி நவீன இயந்திரங்கள் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE