பிஎச்டி. கல்வி தரம் தமிழகத்தில் திருப்திகரமாக இல்லை: சென்னை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் பிஎச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் கல்வி தரம் திருப்திகரமாக இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேசிய தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக ‘தமிழகத்தின் உயர்கல்விச் சிறப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் ஆளுநர்மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதில் என்ஐஆர்எப் தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முன்னிலை இடங்களை பெற்ற சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 11 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த28 கல்வி நிறுவனங்களே பெற்றுள்ளது பெருமைக்குரியது. இதன் நோக்கம் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு வழிவகை செய்வதாகும். நாம் அனைவரும் முதல் இடம் நோக்கி செல்லும் வரை இந்த பயிற்சியை நிறுத்தக் கூடாது.

தமிழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இங்கு பிஎச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒரு சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிஎச்டிக்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது. எனவே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பிஎச்டி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு முதுநிலை படிக்கும்போதே நெட் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

அறிவுசார் சொத்துகள் அவசியம்: மேலும், யுஜிசியின் கல்விஉதவித் தொகையை பெறுவதற்கான தேர்வுகளில் ஆய்வு மாணவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஒருநாடு வளர அறிவுசார் சொத்துகள் அவசியமாகும். உலகளாவிய அறிவுசார் சொத்துக்களில் சீனா 46 சதவீதமும், அமெரிக்கா 13 சதவீதமும் காப்புரிமைகளை வைத்துள்ளன. நம்மிடம் 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதை மனதில் கொண்டு அறிவுசார் சொத்துகளை பெறுவதற்கு அதிக தரம் கொண்ட பிஎச்டி படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பிரகாஷ் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெறுவதற்காக மேற்கொண்ட வழிமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து தரவரிசையில் முன்னிலை பெற்ற பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE