தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ராமேஸ்வரத்தில் கட்டமைப்பு: நிதி வழங்க மத்திய அரசிடம் அமைச்சர் வலியுறுத்தல்

By கி.கணேஷ்

சென்னை: “ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க, ராமேஸ்வரத்தில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்” என்று கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதில், கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும் விதமாக, கோவாவில் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம், அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது: “நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்த நிதி உதவியானது நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையே பாதுகாப்பான மற்றும் வசதியான கப்பல் சேவைகளை உறுதி செய்வது முக்கியமானது என்பதுடன், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும். நாகப்பட்டினம் துறைமுக விரிவாக்கத்துக்காக, சாகர்மாலா திட்டத்தின்கீழ் ரூ.300 கோடி நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இது, நடுத்தர அளவிலான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாளுவதற்கும், இலங்கையுடனான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் உதவும். தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம், தமிழகத்தின் தென் கடற்கரையோரத்தில் வாழும், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மீனவர் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும், குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் மாற்று வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சாகர்மாலா திட்டத்தில் 100 சதவீத நிதியுதவியாக ரூ.11.47 கோடிக்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும்.

ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையினை மீண்டும் தொடங்க ராமேஸ்வரத்தில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். ராமேஸ்வரம் தீவு, ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த முக்கியமான தீவின் இணைப்பினை வலுப்படுத்துவும், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தவும், மண்டபம், பாம்பன் மற்றும் தேவிபட்டினத்தில் கூடுதலாக மூன்று மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத்திலுள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளதால், இந்த பாரம்பரியத்தை மாநில அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தமிழக அரங்கை உருவாக்க மத்திய அரசு 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி தத்துவதற்கு என்றைக்கும் எங்கள் முதல்வர் முன்னுரிமை அளிப்பார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும், மாநில அரசின் பொருளாதாரம் மேம்பாடு அடையவும், உந்து சக்தியாக உதவ வேண்டும்” என பேசினார்.       

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE