அறுவடை செய்யாமலேயே எள் செடிகளை உழவு செய்து அழிக்கும் திருவாரூர் விவசாயிகள்

By KU BUREAU

திருவாரூர்: நெல் சாகுபடியில் ஏற்படுகிற பொருளாதார பின்னடைவை ஈடுகட்ட ஏதுவாக, பணப் பயிரும் - குறைந்த அளவு நீர் தேவையும் உள்ள எள் சாகுபடியை கோடைக்காலங்களில் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கரில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தைப் பட்டத்தில் தெளிக்கப்பட்ட எள் பயிர்கள் நன்கு வளர்ந்திருந்த நிலையில், அறுவடை நாளைஎதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் கோடை சாகுபடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழையால் எள் பயிர்களில் காய்கள் கொட்டிவிட்டன.

எனவே, இதன்பிறகு எள் அறுவடை செய்து பயனில்லை என்பதை உணர்ந்து, பயிர்களை அறுவடை செய்யாமலேயே டிராக்டரை கொண்டு வயலில் உழவு செய்ய தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.

குறிப்பாக, திருவாரூர் அருகே உள்ள சேந்தனாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி, மழையால் சேதமடைந்த 10 ஏக்கர் எள் வயலை, டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நெல் சாகுபடியில் கடந்தாண்டு குறுவை பொய்த்துவிட்டது. இதனால், பெரும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்து, அதன் பின்னர் விவசாயிகள் தாளடி சாகுபடி மேற்கொண்டனர்.

இந்நிலையில், இழப்பை ஈடுகட்ட ஏதுவாக சாகுபடி செய்யப்பட்ட எள் பயிரும், மழையில் சேதம் அடைந்து விட்டதால், நிலத்தை பண்படுத்த குறைந்தபட்சம் உரமாகவாவது பயன்படும் என்ற எண்ணத்தில் எள் செடிகளை அறுவடை செய்யாமல் அப்படியே உழவு செய்து வருகிறோம்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த எள் செடிகளை விவசாயிகள் உழவுசெய்து வருகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE