சரசரவென சரிந்த எஸ்பிஐ பங்குகள்... உச்சநீதிமன்ற உத்தரவால் கடும் வீழ்ச்சி!

By கரு.முத்து

தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில், எஸ்.பி.ஐ., வங்கியின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பங்குச் சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகளில் பெரும்சரிவு ஏற்பட்டது.

எஸ் பி ஐ

பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டத்தை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்களுக்கு நிதி வழங்கியவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. அந்த விவரங்களை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த கெடுவுக்குள் வழங்காத எஸ்பிஐ வங்கி, அந்த விவரங்களை வழங்க தங்களுக்கு நான்கு மாதம் கூடுதலாக அவகாசம் கோரி, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

நேற்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.,யின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், இன்று மாலை வங்கி பணி நேரம் முடிவடைவதற்குள் தேர்தல் பத்திரங்களுக்கு நிதி அளித்தவர்கள் தொடர்பான முழு தகவல்களையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காவிட்டால், வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே 2 சதவீதம் வரை சரிந்தது. நேற்று வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு விலை 1.79 சதவீதம் சரிந்து, 773.95 ரூபாயாக இருந்தது. எனினும், இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று கூறப்படுகிறது. பங்கு விலை குறைந்திருப்பதால் இதை நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE