காங்கிரசுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் கேட்பது நியாயம்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தடாலடி பேட்டி

By ராஜேஷ் மகாலிங்கம்

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது ஊரறிந்த ரகசியம். எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோஷ்டிகள் செயல்படுவதும், அவ்வப்போது மோதிக் கொள்வதும் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில், முன்னணி தலைவர்கள் இல்லாமல் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி

மூத்த தலைவர்களை அழைக்காமல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தை அழகிரி நடத்தியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே.. ?

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னை முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்தவர்கள் தற்போது, முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள். ஏன் கே.எஸ். அழகிரி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது புரியவில்லை.

மக்களவை தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் 15 முதல் 20 சீட்கள் பெற வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்களே..?

கொஞ்சம் இருங்க சிரிச்சிக்கிறேன்...(சிரிக்கிறார்). நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பது நம்மை விட எதிரே இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் சொல்லப் போனால் திமுகவுக்கு நன்றாகவே தெரியும். இப்படி தேவையில்லாமல் பேசி கூட்டணியில் சிக்கலை உண்டாக்க நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அடாவடித்தனம் பண்ணக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 6 தொகுதிகள் கேட்கலாம். அதைவிடுத்து வீராப்புக்காக பேசக் கூடாது. அது கூட்டணி தர்மத்தை பாதிக்கும். இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

20 தொகுதி என்பது காங்கிரஸ் கட்சிக்கான வளர்ச்சி தானே... அதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?

முன்பே கூறியதுதான் நம்ம பலம் என்ன என்பது நம்மை விட நம் எதிரே இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். நான் என்ன கேட்கிறேன்... 20 தொகுதியில் நிற்கவைத்துச் செலவு செய்ய தகுதியான ஆட்கள் காங்கிரசில் இருக்காங்களா? இல்லையே! அப்படி இருக்கும் போது எப்படி கேட்கலாம். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பதே தெரியாது. அப்படி இருக்கும் போது எப்படி 20 தொகுதி கேட்க முடியும். கும்பகோணம் ரயில் மறியல் கதையை சொல்லித்தான் கிண்டல் பண்ணுவாங்க.

ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ்

நீங்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளராகிட்டீங்க... அதனால் திமுகவுக்கு ஆதரவா சொந்தக் கட்சிக்கு எதிரா பேசுறீங்கன்னு அழகிரி ஆதரவாளர்கள் சொல்கிறார்களே..?

என்னைப் பொறுத்தவரை ஸ்டாலினுடைய ஆட்சியை நான் வரவேற்கிறேன். ஸ்டாலின் மிகச் சிறந்த முதலமைச்சராக இருக்கிறார். பதவியேற்ற காலத்தில் இருந்து, இந்த வாரத்தில் மட்டும் தான் நான்கு நாட்கள் உடல்நிலை சரியில்லை என்று ஓய்வு எடுத்திருக்கிறார். ஓய்வில்லாமல் உழைக்கக்கூடிய ஒருவர். தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகத்தில் ஊடுருவ வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அதைத் தடுத்து தமிழகத்தை காப்பாற்றி வருகிறார். ஆகவே அவரை புகழ்வதிலோ அவர் செய்த சாதனைகளை கூறுவதிலோ எந்தத் தவறும் இல்லை.

கே.எஸ்.அழகிரிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முன்னாள் தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தலைவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். குறிப்பாக, நம்முடைய தரம் என்ன என்பதைப் பார்த்து பேச வேண்டும். நம்முடைய கூட்டணி கட்சியை பகைக்காமல் சுமூகமாக பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். விதண்டாவாதம் செய்யக் கூடாது. முதலில் அல்லக்கைகளை தவிர்க்க வேண்டும். கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்க்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மிகவும் மோசமான நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். மற்ற மசோதாக்களைக்கூட நிலுவையில் வைத்திருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை தடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கழுதைக்கு எப்படி கற்பூர வாசனை தெரியாதோ அதுபோல சங்கரய்யாவின் அருமை பெருமைகள் ஆளுநருக்கு தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அடிப்படையில் ஆளுநர் நல்ல மனிதரே கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஆளுநரும் மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்தது கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் பிரச்சினை செய்வதில்லையே. ஆளுநர்கள் தேர்தல் பிரச்சாரம் வரை ஈடுபடுகிறார்கள். இதனை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டும் என்பது தான் எனது பணிவான கருத்து.

பேரவையில் ஈபிஎஸ்...

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேராது என்று நம்புகிறீர்களா..?

அட, நானும் உங்களைப் போலத்தான் நினைத்திருந்தேன். அதுவும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்பு வரை, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளியேறியவுடன் அதிமுகவும் பின்னாடியே வெளியேறிய போதுதான் இன்னும் பாஜகவின் கொத்தடிமையாகத்தான் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டியது போல மக்களவைத் தேர்தலிலும் நிச்சயம் புகட்டுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE