திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி

By KU BUREAU

புதுக்கோட்டை: திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ‘காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளை முறையாக செய்யாமல், அதிமுக ஆட்சியில் அடிக்கல் மட்டும் தான்நாட்டப்பட்டது. திமுக ஆட்சியில் இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.

திமுகவை மிரட்டுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்திருக்கிறார். திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படும் கட்சி அல்ல. இந்தியாவிலேயே தோழமைக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில் திமுகவைத் தவிர வேறு கட்சி இருக்க முடியாது.

புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையின்படி தான், ஒரு நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மூலம் உத்தரவிடப்படுகிறது. மற்றபடி, குண்டர் தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது இல்லை.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE