நிதி குழுக்களின் அணுகுமுறை மாற வேண்டும்: நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: நிதிக் குழுக்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 16-வது நிதிக் குழு தொடர்பான மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த 15-வது நிதிக்குழு 41 சதவீத பகிர்வை பரிந்துரை செய்தது. ஆனால், முதல் 4 ஆண்டுகளில் மொத்த வரி வருவாயில் 31.42 சதவீதம் மட்டுமே பகிரப்பட்டது. ஒருபுறம், செஸ் மற்றும் மேல்வரி ஆகியவற்றால் நிதிப் பகிர்வு குறைந்துள்ளது. மறுபுறம், நிதிப்பகிர்வு முறை மாற்றம் காரணமாக மத்திய அரசின் திட்டங்களில் மாநிலஅரசுகளின் பங்கு அதிகரித்து வருகிறது. இது மாநிலங்களுக்கு இருபுறமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின்கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட துறைகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்படுகிற மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி வளத்தை குறைத்துள்ளது.

மத்திய வரிப் பகிர்வில் 50 சதவீதம் வேண்டும் என்று மாநிலங்கள் இணைந்து கோருவது அவசியமாகிறது. மேலும், விருப்பமானியங்கள் மீதான நம்பகத்தன்மையை குறைப்பது, கணிக்கக்கூடிய மற்றும் புற நிதி ஆதார பரிமாற்றங்களை அதிகரிப்பதையும் உறுதிசெய்ய நிதிக் குழுவை நாம் வலியுறுத்த வேண்டும். அதே நேரம், செஸ் மற்றும் மேல் வரியின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும்மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு வழிமுறையை நிதிக் குழுக்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். தமிழகத்தின் அனுபவத்தில், மாநிலத்தின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, நிதிக் குழுக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு, கடந்த 9-வது நிதிக் குழுவில் 7.931 சதவீதமாக இருந்தநிலையில், 15-வது நிதிக் குழுவில்4.079 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து குறைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தின் நிலுவை கடனில் 43 சதவீதம். இந்த நிதிக் குறைப்பு மாநில நிதியம் மீது மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநிலம் தனது முழுமையான திறனை அடைவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதையும் பிரதிபலிக்கிறது.

மாநிலங்கள் இடையிலான பங்கை தீர்மானிக்கும்போது, அனைத்து நிதிக் குழுக்களும், சமபங்கு மற்றும் செயல்திறனுக்கு இடையில் சமநிலையை உருவாக்க வேண்டும். ஆனால், மறு பகிர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, சிறப்பாக செயல்படாத மாநிலங்களுக்கு ஆதரவாக ஊக்க நிதிகளை திசைதிருப்புவதுடன், வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளின் முக்கியமான வளர்ச்சி வளங்களை இழக்கச் செய்கிறது. போதிய வளங்கள் இல்லாமல் அத்தகைய பகுதிகளின் வளர்ச்சியை குறைக்கும் பட்சத்தில், மறு பங்கீட்டு பயனாளிகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும்.

குறிப்பாக, ஏழை மாநிலங்களுக்கு மறுபகிர்வு செய்யும் வகையிலான அணுகுமுறையை ஒவ்வொரு நிதிக் குழுவும் பின்பற்றுகிறது. ஆனால், இந்த அணுகுமுறையாலும், ஏழை மாநிலங்களால் தாங்கள் விரும்பிய அளவுக்கு வளர்ச்சி அடைய முடியவில்லை. எனவே, நிதிக் குழுக்கள் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது அவசியம். இதுதவிர, மாநிலங்களின் செயல்திறனுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதுடன், வளரும் மாநிலங்களை கட்டுப்படுத்துவதற்கு பதில்அனைத்து மாநிலங்களும் முன்னேறும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் சமபங்கு, வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் மிகவும் சமநிலையான அணுகுமுறைக்காக நாம் அனைவரும் உழைக்க முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE