மதுரையில் மின்சாதன பொருள் வெடித்து தீ விபத்து: மகளிர் விடுதியில் தங்கியிருந்த 2 ஆசிரியைகள் உயிரிழப்பு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் மின் சாதனப் பொருள்வெடித்து நேரிட்ட தீ விபத்தில் 2 ஆசிரியைகள் உயிரிழந்தனர்.

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே கட்ராப்பாளையத் தெருவில் உள்ள கட்டிடத்தின் மாடியில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 20 அறைகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள், ஆசிரியைகள் உட்பட 45 பேர் தங்கிஇருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை விடுதியில் தீப்பற்றி, கரும்புகை வெளியேறியது. அருகில் இருந்தவர்கள் விடுதிக்குள் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், 3-வது மாடியில் சிலர் சிக்கியிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயைஅணைத்தனர். பின்னர், புகையில்சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கிய நிலையில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.

இதில், தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியைச் சேர்ந்த சிங்கதுரை மனைவி பரிமளா சவுந்தரி (56),எட்டையபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் உயிர்இழந்தனர். விடுதி வார்டனான பழங்காநத்தம் புஷ்பா (48) செவிலியர்கல்லூரி மாணவி மேலூர் ஜனனி(17), சமையலர் கனி(62)ஆகியோர் மீட்கப்பட்டு, எல்லீஸ்நகர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்த பரிமளா சவுந்தரி சோழவந்தான் அருகிலுள்ள இரும்பாடி அரசு நடுநிலைப் பள்ளியிலும், சரண்யா சிம்மக்கல் தனியார் நர்சிங் கல்லூரியிலும் ஆசிரியைகளாகப் பணிபுரிந்தனர். உயிர்இழந்த இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சரண்யா, பரிமளா சவுந்தரி

போலீஸ் விசாரணையில், விடுதி அறையில் இருந்தபிரிட்ஜ் வெடித்து, அதில் உள்ள சிலிண்டர் மூலம் வெளியேறிய நச்சுப் புகையால் 2 பேர் உயிரிழந்ததும், 3 பேர் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. மகளிர் விடுதிக் கட்டிடத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான கட்டிடம் என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி இருந்தது. எனினும், விடுதி தொடர்ந்து செயல்பட்டு வந்ததும், போதிய பாதுகாப்பு இன்றியும்,விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விடுதியை நடத்திவந்த இன்பா என்ற பெண்ணை திடீர் நகர் போலீஸார் கைது செய்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE