சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய ரயில்களில் 3 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது.
அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜன. 15-ம் தேதி மாட்டுப்பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. மேலும், ஜன. 13-ம் தேதி (திங்கள்கிழமை) போகி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்நிலையில், ஜன.10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 3 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, குமரி, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 3 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது. இதுபோல, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் புறப்படும் அனந்தபுரி விரைவு ரயிலிலும் “ரெக்ரெட்” என்று காட்டியது. சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்படும் மலைகோட்டை விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 220 ஆக இருந்தது. இதுபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, முறையே 258, 173 என காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது.
முக்கிய ரயில்கள் அனைத்திலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது. மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பகல் நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வந்தது.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு வந்து நெடுநேரம் காத்திருந்த மக்கள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில், ஜனவரி 11-ம் தேதி (சனிக்கிழமை)க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.13) நடைபெறுகிறது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,“பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய, சில நிமிடங்களில் தென்மாவட்ட விரைவு ரயில்களின் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. 80 சதவீதத்துக்கு மேல் டிக்கெட் முன்பதிவு இணையதளம் மூலமாக நடைபெற்று உள்ளது. அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி பிறகு அறிவிக்கப்படும்” என்றனர்