அரசின் அனுமதி கிடைக்கவில்லை என இன்னும் எத்தனை முறைதான் கூறுவீர்கள்? - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி

By KU BUREAU

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணைக்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என இன்னும் எத்தனை முறைதான் கூறிக்கொண்டே இருப்பீர்கள்? என சிறப்பு நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 குற்ற வழக்குகளை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசின் பொதுத்துறையிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், அந்த அனுமதி கடிதம் பெற்று சமர்ப்பிக்க 3 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி, “கடந்த மாதமே அனுமதி கிடைத்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதே. இனிமேலும் அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. குற்ற வழக்கின் விசாரணைக்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என இன்னும் எத்தனை முறைதான் கூறிக்கொண்டே இருப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கை செப்.18-க்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE