‘நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ - உற்சாகம் தொலைத்த உதயநிதி

By சானா

விளையாட்டுத் துறை அமைச்சரான பின்னர், விளையாட்டுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு சீரியஸாக மாறிவிட்ட உதயநிதி, அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக(!) சீரிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அருகில் அவரது பால்ய கால நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அணுக்கமாக அமர்ந்திருந்தார். அடுத்தடுத்து வெடித்திருக்கும் பிரச்சினைகளை எண்ணியபடி - வெளியில் காத்திருக்கும் வில்லன்களை வீழ்த்த ஆயத்தமாகும் ‘மாமன்னன்’ பாணியில் இருக்கையில் இருவரும் இறுக்கமாக அமர்ந்திருந்தனர்.

உதயநிதி மெல்ல ஆரம்பித்தார்.

“அமைச்சரே! நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ஒருபக்கம் நீட் தற்கொலைகள், இன்னொரு பக்கம் சாதியக் கொடுமைகள். இதுக்கெல்லாம் முடிவு கட்டுவோம்னு நம்மளை நம்பி விடியல் அரசை மக்கள் கொண்டுவந்துட்டாங்க. நம்மளால ஒண்ணுமே முடியாதுங்கிறதை எப்படி அவங்களுக்குப் புரியவைக்கிறது?” என்று அவர் ஆதங்கப்பட,

“அதேதான் மாமன்னா! எங்கேயாவது ஒரு மூலையில ஏதாச்சும் எசகுபிசகா நடந்தா, ஸ்ட்ரெய்ட்டா ஸ்பாட்டுக்குப் போகணும்னு ஸ்ட்ரெஸ் கொடுக்கிறாங்க. இருக்கிற இடத்துல இருந்து இறுக்கமான முகத்தோட ப்ளாக் அண்ட் ஒயிட் வீடியோ வெளியிட்டாலும் பங்கம் பண்றாங்க. நல்லவேளை(!) எனக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போனதால... விட்டுட்டாங்க. இல்லைன்னா…” என்று அங்கலாய்த்தார் அன்பில் மகேஸ்.

திடீரெனத் தடதடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, ஒரு கூட்டம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தது. பார்த்தால் - அனைவரும் பத்திரிகையாளர்கள்.

“நீட் தற்கொலைகளுக்கு நீங்கதான்… அதாவது நீங்க கொடுத்த தவறான வாக்குறுதிதான் காரணம்னு பாஜக தலைவர்கள்லாம் பேசுறாங்க. அவங்கதான் அதுக்கு முடிவெடுக்க முடியும்ங்கிறப்போ, எந்த தைரியத்துல நீங்க அப்படி வாக்கு கொடுத்தீங்க?” என்று ஒரு நிருபர் கேட்டதும், ‘சினிமா வசனம் பேசுறதைவிட பிரஸ் மீட்ல பேசுறப்போதான் நமக்குக் குரல் நடுங்குது. இவங்க வேற...’ என்று மைண்ட் வாய்ஸில் மருகிய உதயநிதி உதறலைக் காட்டிக்கொள்ளாமல், “நீட்டுக்கு எதிரான எங்க நீண்ட பயணத்துல மைக்கைத் தூக்கிட்டு ஆளுநர் குறுக்கும் மறுக்கும் நடக்கிறார். குடியரசுத் தலைவர்கிட்ட தீர்மானம் போய்ட்டாலும், தீர்வு ஏதும் கைக்கு வரலைங்க. ஆனாலும் நாங்க விடமாட்டோம்” என்றார்.

“அதுசரி, தேர்தல் நேரத்துல, உங்ககிட்ட ஏதோ சீக்ரெட் திட்டம் இருக்குங்கிற ரேஞ்சுல ஸ்ட்ராங்கா பேசினீங்க… ஆட்சிக்கு வந்ததும் தீர்மானம் மேல பழியைப் போட்டுட்டு பகுமானமா எஸ்கேப் ஆகுறீங்களே?” என்று அடுத்து கேள்வி வந்ததும், “அதுக்காகத்தான் இதுவரைக்கும் யாருமே செய்யாத போராட்டத்தை ப்ளான் பண்ணியிருக்கோம். 20-ம் தேதி எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கோம். காலையில டிபன் சாப்பிட்டுட்டு கழகத் தோழர்கள்லாம் கரெக்ட்டா வந்துடுவாங்க” என்று கண்டிப்பான குரலில் சொன்னார் உதயநிதி.

“ஆனா, அதேநாள்ல நடக்கிற மதுரை மாநாட்டைத் திசைதிருப்பத்தான் இந்த நாடகம்னு அதிமுக தலைவர்கள் ஆவேசப்படுறாங்களே?” என்று கேட்டதும், உர்ரென்று முகம் மாறிய உதயநிதி, “அவங்களும் நீட்டுக்கு எதிராப் பேச மாட்டேங்கிறாங்க. சும்மா பேசிப் பார்க்கிறது தானேன்னு... நாங்க எங்க சைடுல ட்ரை பண்றோம். அதையும் அசிங்கப்படுத்துறாங்களே?!” என்றார்.

“அஜித்னா யார்னு அமைச்சர் துரைமுருகன் கேட்டது சர்ச்சையாகியிருக்கு. அப்ப இனிமே விஜய் படம் மட்டும்தான் விநியோகிப்பீங்களா?” என்று அடுத்து ஒருவர் கேட்க... உதயநிதி உக்கிரநிதியானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE