கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில்துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் கூறியதாவது, “ஸ்வீட்டுக்கு 5 சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். பேக்கரி பொருட்களில் பிரட் மற்றும் பன்னுக்கு மட்டும் வரி இல்லை. மற்ற அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
ஒரே பில்லில் குடும்பத்துக்கு பலவித வரி விதிக்கப்படுவதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால் உள்ளே கிரீம் வைத்தால் 18 சதவீத வரி. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். கடை நடத்த முடியவில்லை. இந்தியா முழுவதும் சேர்த்து அதிகரித்தாலும் சரி, குறைத்தாலும் சரி, சீரான வரியை விதிக்க வேண்டும். முன்பெல்லாம் கடனுதவி பெற பல மாதங்கள் வங்கிகளுக்கு தொழில்முனைவோர் சென்ற காலம் மாறிவிட்டது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று வங்கிகள் கடன் வழங்க துரத்துகின்றன. எனவே, நிதியுதவி பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓட்டல்களில் ஒரு நாள் வாடகை ரூ.7,500 பில் போட்டால் உடனடியாக ஐந்தில் இருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாறிவிடுகிறது. ஓட்டல்களில் ஸ்டார் பிரிவுகள் உள்ளன. எனவே, அதன் அடிப்படையில் வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
» “அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை ‘ஏடிஎம் கார்டு’ போன்றது” - வி.வி.ராஜன் செல்லப்பா
» ஆவடி கூலி தொழிலாளி கொலை வழக்கில் கைதான 8 பேர் மீதும் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்
அவர் பேசும்போது, அரங்கில் கூடியிருந்த தொழில்முனைவோர் அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர். எளிமையான உதாரணத்துடன் பேசிய அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் அவருக்கு நேரிலும் போனிலும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறும்போது, “ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் மாறுபட்ட வரி விதிப்பு, சில துறைகளுக்கு அதிக வரி விதிப்பு, செலுத்திய வரியை இன்புட் கிரெடிட் எடுப்பது என பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதுகுறித்து பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில், மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள ஜிஎஸ்டி பிரச்சினைகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு எடுத்துக்கூறிய தொழிலதிபர் சீனிவாசனின் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது” என்றனர்.