மதுரை: மதுரை தனியார் விடுதி தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கவேணடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் தனியார் விடுதி தீ விபத்தில் உயிர் தப்பி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, தீ விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மதுரையில் நடக்கக்கூடாத சம்பவம் இது, வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தேன்.
அவர்கள், குடும்பச் சூழ்நிலை காரணமாக இங்கு தங்கி இருந்தது தெரிகிறது. ஒரே அறையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் தங்கி இருந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பே இக்கட்டிடம் மோசமாக இருக்கிறது என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கு அதிகாரிகளும் ஒரு காரணம். மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுபோன்று விதிமீறலுடன் நடத்தப்படும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி செய்யவேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கே ரூ.10 லட்சம் வழங்கும் நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கலாம்'' என்றார்.