கள்ளக்குறிச்சி: நியாய விலைக் கடைகள் மூலம்குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்படக் கூடிய துவரம் பருப்பு,தரமற்ற வகையில் வந்திறங்கிய தால் அவற்றை கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேற்று திருப்பி அனுப்பினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத்திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் ஆகியன கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு மே மாதத்துக்கு தேவையான 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்புமற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்களுக்குரிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்புவிநியோகிப்பாளர்கள் நால்வருக்கும் பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மே மாதம் விநியோகிப்பதற்காக நியாய விலைக் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும்31,19,722 பாமாயில் பாக்கெட்கள் படிப்படியாக வந்த வண்ணம் உள்ளது.
» கோடை மழையால் கொடியிலேயே சேதமடைந்த திராட்சை - திண்டுக்கல் விவசாயிகள் கவலை
» பர்கூர் - ஒரப்பம் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்
அந்த வகையில் கடந்த சில தினங்களாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வந்த துவரம் பருப்பு மூட்டைகள் ஈரப்பதத்துடன், போதுமான தரமற்ற வகையில் வந்தததை ஆய்வு செய்த மண்டல மேலாளர்கள், அதனை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கடலூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு இரு லாரிகளில் வந்த துவரம் பருப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் 4 லாரிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுளது. கள்ளக்குறிச்சிக்கு வந்தவற்றில் ஒரு லாரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்துக்கு மாதம் 417 டன் துவரம் பருப்புவிநியோகிக்கப்படும், தற்போதுஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு பொருட்கள் வரத் தொடங்கி யுள்ளது.
மழை காரணமாக மூட்டை கள் நனைந்திருப்பது கண்டறியப்பட்டு, கொள்முதல் செய்த4 நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அதற்கு மாற்றாக தரமான பருப்புகளை அனு்பியுள்ளனர்.
ஓரிரு தினங்களில் கடைகளுக்கு பாமாயில் பருப்பு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்” என்றார். இதுபற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட மண்டல மேலாளர் கூறுகையில், “இம்மாவட்டத்தில் மாதத்துக்கு 378 டன் தேவை. இதுவரை 93 டன் பருப்பு வந்துள்ளது.
ஒரு லாரியில் வந்த பருப்பு ஈரப்பதத்துடன் காணப்பட்டதால் அவை திருப்பி அனுப்பப்பட்டது. இருப்பினும் தற்போது கையிருப்பில் உள்ளவற்றின் மூலம் கடைகளுக்கு பருப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
கடலூர் மண்டல மேலாளரை தொடர்பு கொண்ட போது, அவர் பேச முன்வரவில்லை இந்தச் சிக்கலால் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மே மாதம் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் மேலும் காலதாமதம் ஆகும் என நியாய விலைக் கடைகளில் தெரிவிக்கின்றனர்.